சூயஸ் கால்வாயில் கப்பல் சிக்க மன்னரின் சாபம் தான் காரணமாம்!
சூயஸ் கால்வாயில் பிரம்மாண்ட கப்பல் ஒன்று சிக்கி நின்றதும், அதனால் சரக்குப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதும் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், இப்படி ஒரு பிரச்சினை ஏற்படக் காரணம் எகிப்தின் பழங்கால மன்னரான பார்வோனின் சாபம்தான் என சமூக ஊடகங்களில் செய்திகள் பகிரப்படுகின்றன.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் எகிப்து தொடர்சியாக பல விபத்துக்களை சந்தித்தது. ஒரு பக்கம் சூயஸ் கால்வாயில் கப்பல் சிக்கி சரக்குப் போக்குவரத்தால் உலகின் பல நாடுகள் பாதிக்கப்பட, ரயில் விபத்து ஒன்று பல உயிர்களை பலிகொண்டது.
பின்னர் 10 மாடிக் கட்டிடம் ஒன்று நிலைகுலைந்து இடிந்து விழுந்தது. இப்படி தொடர்ந்து மோசமான சம்பவங்கள் நிகழக் காரணம் என்ன என்பது தொடர்பாக ட்விட்டரில் செய்திகள் குவிகின்றன. எகிப்திலுள்ள அருங்காட்சியகம் ஒன்றிலிருந்து, 22 ராஜ குடும்பத்தினரின் மம்மிகள் மற்றொரு அருங்காட்சியகத்துக்கு மாற்றப்பட உள்ளன.
ஆனால், மம்மிகளை அடக்கம் செய்யும்போது, பழங்கால எகிப்திய பூஜாரிகள் ஒரு சாபம் கூறுவார்களாம். யாராவது அந்த மம்மிகளை தொந்தரவு செய்தால் அவர்களை அந்த சாபம் பிடித்துக்கொள்ளுமாம். ‘மன்னரின் நிம்மதியைக் குலைப்பவர்கள் மீது வேகமாக மரணம் வரும்’ என்று கூறுகிறதாம் எகிப்து மன்னரான பார்வோனின் சாபம்.