அமைச்சர் - மகனின் கூட்டுச்சதியே ஜீப்பை ஏற்றி விவசாயிகள் கொலைச் சம்பவம் - எந்த நேரத்திலும் கைது - குவியும் கண்டனங்கள்
மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா -மகன் ஆஷிஸ் மிஸ்ராவின் கூட்டுச்சதியால்தான் ஜீப்பை ஏற்றி விவசாயிகளை கொலை சம்பவம் நடந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் சொந்த கிராமம், உத்திரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் இருக்கும் டிகுனியா. அமைச்சரின் சொந்த கிராமத்தில் நடக்க இருந்த நிகழ்வுக்கு உத்தரபிரதேசத்தின் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வருகை தந்தார்.
அப்போது, அந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அஜய் மிஸ்ராவும், அவரது மகன் ஆஷிஷ் மிஸ்ராவும் பங்கேற்றார்கள். லக்கிம்பூர் கேரி அருகே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் ஆஷிஷ் மிஸ்ராவின் காரை மறித்தனர். இதில், ஆத்திரமடைந்த ஆஷிஷ் மிஸ்ரா, கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் போராடிய விவசாயிகள் மீது காரை ஏற்றினார் என்று சொல்லப்படுகிறது. இச்சம்பவம் மற்றும் அதனால் எழுந்த வன்முறையினால் 4 விவசாயிகள் உள்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நாடெங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நடந்த சம்பவத்திற்கும், தனது மகனுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மறுத்து வந்தார். இந்நிலையில், அந்த சம்பவமும், விவசாயிகளின் குற்றச்சாட்டுகளும் உண்மைதான் என்று ஆதார வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
விவசாயிகள் கூட்டத்திற்குள் கார் சீறிப்பாய்ந்ததில் அடித்து தூக்கி வீசப்படும் அந்த வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி பரவி பெரும் கண்டனங்களை வலுத்து வருகிறது. விவசாயிகள் மீது ஏறிய கார் எங்களுக்கு சொந்தமானதுதான். ஆனால், அந்த சம்பவ இடத்தில் என் மகன் கிடையாது. நானும் கிடையாது என்று அமைச்சர் தரப்பு மறுப்பு தெரிவித்திருந்தது.
ஆனாலும் விவசாயிகளின் புகாரின் அடிப்படையில், அமைச்சர் அஜய் மிஸ்ரா, அவரது மகன் ஆஷிஷ் மிஸ்ரா பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மீது காரை ஏற்றிய செயல் அமைச்சர் மற்றும் அவரது மகனின் திட்டமிட்ட கூட்டு சதிச்செயல் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தச் சம்பவத்தில் காரை ஏற்றி கொன்றதோடு அல்லாமல் அமைச்சரின் மகன் கூட்டத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் அதில் சுக்விந்தர் சிங் என்கிற விவசாயியின் மகன் குர்விந்தர் உயிரிழந்தார் என்றும் விவசாயிகள் தரப்பினர் கூறிவருகின்றனர்.
இதனால் அமைச்சர் அஜய் மிஸ்ராவும், அவரது மகன் ஆஷிஸ் மிஸ்ராவும் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற தகவல் பரவுகிறது.