பல்வேறு குற்றச்செயல்களில் தொடர்புடைய இருவர் வெட்டிக் கொலை
பல்வேறு குற்றச்செயல்களில் தொடர்புடைய இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அடுத்த மாடம்பாக்கம் ஏரியில் வெட்டுக்காயங்களுடன் 2 பேரின் உடல்கள் கிடைப்பதாக மணிமங்கலம் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் முட்புதர்களில் வெட்டுக் காயங்களுடன் கிடந்த சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
அதில் கொலை செய்யப்பட்ட இருவரும் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த இமாம் அலி (18), முகமது இஸ்மாயில் (35) என்பதும் இருவர் மீதும் மணிமங்கலம், ஓட்டேரி, கூடுவாஞ்சேரி, உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை கொள்ளை வழிப்பறி போன்ற குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து விசாரணை செய்ததில் மாடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் ( 33) என்பவர் நேற்றிரவு நடந்து சென்று கொண்டிருந்தபோது இமாம் அலியும் முகமது இஸ்மாயில்லும் சேர்ந்து கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்ய முற்பட்டதும் அங்கிருந்து தப்பி ஓடிய ரமேஷ் அதே கிராமத்தைச் சேர்ந்த அவரது கூட்டாளிகளான ராஜி(39), முத்து(41) ,பொன்னையா(26 ), ஆகிய நான்கு பேரும் சேர்ந்து ஏரிக்கரையில் தலைமறைவாக இருந்த முகமது இஸ்மாயில், இமாம் அலியையும் கத்தி, இரும்பு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் இதுதொடர்பாக ரமேஷ் உட்பட மூவரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா தலைமையிலான போலீசார் கைது செய்து கொலை சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.