ஓய்வு முடிவை அறிவித்தார் பிரபல கிரிக்கெட் வீரர் - ரசிகர்கள் அதிர்ச்சி
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் கீரன் பொல்லார்ட் அறிவித்துள்ளார்.
கடந்த 2007 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக களமிறங்கிய பொல்லார்ட் இதுவரை 123 ஒருநாள் மற்றும் 101 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2007 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக தனது ஒருநாள் போட்டியிலும், 2008 ஆம் ஆண்டு பிரிட்ஜ்டவுனில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக டி20 போட்டியிலும் விளையாடிய அவர் அவர் மேற்கிந்தியத் தீவுகளுக்காக ஒரு டெஸ்டில் கூட விளையாடியதில்லை.
அதிரடி ஆட்டத்துக்கு பெயர் போன பொல்லார்ட் 2014 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்துடன் சம்பளம் தொடர்பாக நடைபெற்ற மோதலில் அணியில் இருந்து நீக்கப்பட்டார். பின் 2016 ஆம் ஆண்டு கிரிக்கெட் களத்திற்கு திரும்பிய அவர் 2019 ஆம் ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிறந்த வீரராக திகழ்ந்து வந்த பொல்லார்ட் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் 2010 ஆம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணி வீரராக வலம் வந்து பிற அணிகளின் அபாயகரமான பேட்ஸ்மேனாக மாறினார்.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ ஒன்றையும் பொல்லார்ட் வெளியிட்டுள்ளார். அவரின் இந்த முடிவு கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.