தர்காவில் மாயமான குழந்தை.. 24 மணி நேரத்தில் மீட்ட போலீசார்..!
நெல்லையில் கடத்தப்பட்ட 2 வயது பெண் குழந்தையை போலீஸார் 24 மணி நேரத்தில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர் .
குழந்தை மாயம்
ராதாபுரம் அருகே உள்ள ஆத்தங்கரை பள்ளிவாசலுக்கு தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் இருந்து சாகுல் ஹமீது மற்றும் அவரது மனைவி நாகூர் மீரா இவரது மகன் மற்றும் 2 வயது பெண் குழந்தை நஜிலா பாத்திமா ஆகியோர் வந்திருந்தனர்.
சாகுல் ஹமீது அவரது மகன் மற்றும் மகளுக்கு மொட்டை அடித்து நேர்த்திகடன் செலுத்தியுள்ளார்.
இரவு நேரம் ஆகிவிட்டதால் தர்காவில் உள்ள திண்ணையில் குழந்தைகளுடன் சாகூல் ஹமீது மற்றும் நாகூர் மீரா படுத்து தூங்கி விட்டனர்.
காலையில் எழுந்திருக்கும் போது பெண் குழந்தை நஜிலா பாத்திமாவை காணவில்லை. இதனால் பதறி போய் பெற்றோர்கள் குழந்தையை அங்கும் இங்கும் தேடினர்.
ஆனால் எங்கு தேடியும் கிடைக்காததால் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதனை அடுத்து போலீஸார் அங்கு வந்து சிசிடிவிகளை ஆய்வு செய்தனர்.
சிசிடிவி ஆய்வில் அதிகாலையில் குழந்தையை காரில் கடத்தி செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இதையடுத்து போலீஸார் அந்த காரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
கடத்தல் சதி அம்பலம்
மேலும், ஆத்தங்கரை பகுதியில் உள்ள விடுதிகளில் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது தவறான முகவரி கொடுத்து தம்பதியர் ஒரு முதியவர் என மூன்று பேர் தங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதில் அந்த முதியவர் போலீஸாரிடம் சிக்கினார். இதையடுத்து போலீஸார் அவரிடம் விசாரணை செய்ததில் குழந்தையை கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரியவந்தது .
பிறகு போலீஸார் கேரளாவிற்கு விரைந்தினர். போலீஸ் வருவதை அறிந்த கடத்தல் கும்பல் குழந்தையை திருச்செந்தூரில் இருந்து குலசேகரபட்டிணம் செல்லும் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை அருகில் படுக்க வைத்து விட்டு சென்றது.
இது குறித்து அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தெரிவித்தனர். திருச்செந்தூர் போலீஸார் குழந்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக ஆத்தங்கரை போலீஸாருக்கு தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த குழந்தை ஆற்றங்கரை பள்ளிவாசலில் காணப்போன நஜிலா பாத்திமா என்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து குழந்தையை பெற்றோரிடம் போலீஸார் ஒப்படைத்தனர். சம்பவம் நடந்து 24 மணி நேரத்திலேயே குழந்தையை மீட்டகப்பட்டது.