6 வயது சிறுமியை கடத்தி கார்ட்டூன் போட்டு காட்டிய மர்ம கும்பல் - 20 மணி நேரத்தில் மீட்பு!
கேரளாவில் மர்ம கும்பலால் கடத்தப்பட்ட 6 சிறுமி 20 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்டுள்ளார்.
சிறுமி கடத்தல்
கேரா மாநிலம் கொல்லத்தை சேர்ந்த அபிகேல் சாரா ரெஜினா (6) என்ற சிறுமி நேற்று முன்தினம் மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். தனது அண்ணன் ஜோனாதனுடன் டியூசனுக்கு சென்றுகொண்டிருந்தபோது, காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் சாராவை கடத்தி சென்றனர்.
அந்த கும்பலில் ஒரு பெண் இருந்ததாக சிறுமியின் அன்னான் ஜோனாதன் தெரிவித்தார். இதனையடுத்து, சிறுமியை விடுவிக்க ரூ.10 லட்சம் வேண்டும் என மர்ம நபர் ஒருவர் உறவினர்களிடம் போனில் பேசினார்.
இதனையடுத்து தீவிர விசாரணையில் மேற்கொண்ட போலீசார், கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஒருவரின் மாதிரி படத்தை வெளியிட்டது. மேலும், கேரள மாநிலம் முழுவதும் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
கடத்தியவர்கள் யார்?
இந்நிலையில் நேற்று மதியத்திற்கு மேல் கொல்லம் நகரின் முக்கிய பகுதியான ஆசிரமம் மைதானத்தில் சிறுமியை கடத்தல் கும்பல் ஆட்டோவில் இறக்கி விட்டுச் சென்றுள்ளனர்.அங்கு சென்ற போலீசார் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
பின்னர் சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து அந்த சிறுமி கூறுகையில், காரில் அழுதபோது வாயைப் பொத்தி பின் சீட்டில் படுக்க வைத்ததாகவும், இரவு ஒரு வீட்டில் தங்க வைத்ததாகவும். தேவையான தின்பண்டங்கள் வாங்கி கொடுத்ததுடன், லேப்டாப்பில் கார்ட்டூன் பார்க்க அனுமதித்ததாகவும் சிறுமி தெரிவித்துள்ளார்.
சிறுமி கிடைத்தை தொடர்ந்து கடத்தியவர்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சிறுமியை ஆசிரமம் மைதானத்தில், சுடிதார் அணிந்து சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஆட்டோவில் கொண்டுவிட்டதாக ஆட்டோ டிரைவர் சஜீவன் என்பவர் தெரிவித்துள்ளார்.