"தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு ஒரே தீர்வு கட்சத் தீவு மீட்புதான்" - கி.வீரமணி
தமிழக மீனவர்கள் 55 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்; தமிழக மீனவர் பிரச்சனைக்கு ஒரே தீர்வு கட்சத் தீவு மீட்புதான் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதியாக கச்சத்தீவு கடற்பரப்பு உள்ளது.
ஆனால், கச்சத்தீவு கடற்பரப்புக்குச் செல்லும் தமிழ்நாட்டு மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதும், தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர்கதையாகவே நடந்துகொண்டிருக்கிறது.
இலங்கைக் கடற்படையால் இதுவரை 800-க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இலங்கைக் கடற்படையினர் நள்ளிரவில் நடுக்கடலில் தமிழ்நாட்டு மீனவர்களை அரிவாளால் வெட்டுவது, கற்களைக் கொண்டு தாக்குவது இன்னமும் ஓய்ந்தபாடில்லை.
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்ததாக கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதியன்று 5 தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகளைப் பறிமுதல் செய்தது; இலங்கைக் கடற்படை. மேலும் 54 தமிழ்நாட்டு மீனவர்களையும் கைது செய்தனர்.
கொரோனா தொற்று பரவல் காலம் என்பதால், அப்போது தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கைக் கடற்படை விடுவித்திருந்தது. அதன்பிறகு அக்டோபர் 15 ஆம் தேதி 23 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கடந்த காலங்களில் பறிமுதல் செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகள் கேட்பாரற்றுக் கிடந்து, முற்றிலும் சிதிலமடைந்து போயின.
நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி வந்தது முதல் இலங்கையோடு மிகவும் நல்லுறவு பேணுவதாகக் கூறப்படுகிறது.
'இராமாயணம் எக்ஸ்பிரஸ்' என்ற சிறப்பு சுற்றுலா ரயிலை அறிமுகப்படுத்தி, இலங்கை - இந்தியா உறவை வலுப்படுத்தும் என்று கூறினார்! 10.12.2021 அன்று இந்தியா, இலங்கைக்கு சுமார் 100 கோடி ரூபாய் கடனாக வழங்க முடிவு செய்துள்ளது.
முதலில் ரூ.70 கோடியும், பின்னர் ரூ.20 கோடியும் தரும் ஒப்பந்தம் போடப்பட்டு, சில நாள்களுக்கு முன்பு ரூ.50 கோடி முன்பணமாகக் கொடுக்கப்பட்டது.
இந்தியா கடன் கொடுத்த 3 நாள்களுக்குப் பிறகு, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி, தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்து வருகின்றனர்.
காற்றடித்து படகுகள் சென்றாலும், நிலத்தில் உள்ளதுபோல எல்லைக்கோடு அங்கே பயன்படுத்த முடியுமா? நேற்று (19.12.2021) நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரத்தைச் சேர்ந்த 43 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களின் 6 விசைப்படகுகளும் இலங்கைக் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொத்தம் 55 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களின் படகுகளும் இலங்கைக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு, இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டன.
நீதிமன்றம் இம்மாதம் 31 ஆம் தேதிவரை தமிழ்நாட்டு மீனவர்களை சிறையில் வைக்க ஆணை பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டு மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது ஒரு தொடர் கதையாகவே ஆகிவிட்டது. கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி, தமிழ்நாட்டுத் தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்பாக, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் முன்பே, தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கிய பிரதமர் மோடி, 14.2.2021 அன்று சென்னையில் பேசியது என்ன?
''மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாப்போம் என உறுதி அளிக்கிறேன். இலங்கை அரசால் கைது செய்யப்படும் மீனவர்களை உடனடியாக விடுவிக்க, ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்தது.
இலங்கை சிறைகளில் இப்போது ஒரு மீனவர்கூட இல்லை. மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளில் இதுவரை 313 படகுகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள படகுகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இந்தியாவின் கடலோரப் பகுதிகளை மேம்படுத்த சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பல திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. மீன்பிடி தொழிலுக்கான உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
கடற்பாசி வளர்ப்புக்கு என தமிழ்நாட்டில் தனி பூங்கா அமைக்கப்படும். சமூக மற்றும் உள் கட்டமைப்புகளையும் இந்தியா விரைவாக மேம்படுத்தி வருகிறது'' என்று கூறினார்.
அண்மையில் மத்திய அரசின் வெளியுறவுச் செயலாளர் இலங்கை சென்று, இந்திய - இலங்கை உறவுபற்றி எல்லாம் விரிவாகப் பேசினார் என்ற செய்தி வெளிவந்துள்ளது. என்ன பலன்?
தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதும், அவர்களின் வாழ்வுக்கு ஆதாரமான படகுகள் பறிமுதல் செய்வதும்தானே கண்ட பலன்? ''தானம் கொடுத்த மாட்டின் பல்லைப் பிடித்துப் பார்ப்பதுபோலவே'' நடப்பு இருக்கிறது!
தமிழ்நாட்டுக்குச் சொந்தமான கச்சத்தீவை தாரை வார்த்ததன் விளைவுதானே இது. தி.மு.க.மீது பழிபோடுவது ஏற்கத்தக்கது அல்ல.
தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சினைக்கு ஒரே தீர்வு கச்சத்தீவை மீட்பதுதான். நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சிப் பேதமின்றி ஓங்கிக் குரல் கொடுத்து ஆவன செய்ய வலியுறுத்துகிறோம். இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.