“அபாண்டமாக அவதூறு பரப்பிய அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” - கீ. வீரமணி

dmk bjp annamalai clash ki veeramani
By Thahir Dec 15, 2021 05:16 AM GMT
Report

குன்னூரில் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 13ஆம் தேதி அன்று தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் தளத்தில்,

"ஜெனரல் பிபின் ராவத் இறந்தது சரிதான் என்று திராவிடர் கழகத்தைச் சேர்ந்த அதிகாரபூர்வ துணை அமைப்புகள் கொண்டாடி இருக்கிறார்கள்.

ஆனால், இங்குள்ள அரசு அவர்களை எல்லாம் விட்டுவிட்டு, கருத்துச் சுதந்திரத்தை கருவோடு அழிக்க நினைக்கிறது திமுக அரசு - அண்ணாமலை" என்ற கருத்து வெளியிடப்பட்டது.

இதற்கு எதிர்வினை ஆற்றி இருக்கிறார் திராவிடர் கழக தலைவர் வீரமணி. நேற்று அவர் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்தியாவின் முப்படை தளபதி உள்ளிட்ட 13 பேர் விபத்தில் மரணித்தது குறித்து திராவிடர் கழகத்தின் சார்பில் இரங்கலையும் வீர வணக்கத்தையும் 8 .12. 2021 அன்று விடுதலை நாளேட்டில் வெளியிட்டிருந்தோம் என்றும்,

உண்மை இவ்வாறு இருக்க திராவிடர் கழகத்தைச் சேர்ந்த அதிகாரபூர்வமான துணை அமைப்புகள் ஜெனரல் இறந்தது சரிதான் என்று கொண்டாடி இருப்பதாக தமிழ்நாடு பாஜகவின் தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.

எங்கு எப்பொழுது திராவிடர்கழகம் இறந்தது சரிதான் என்று கொண்டாடியது என்று விளக்கப்படவில்லை.இதிலிருந்தே இது பொய்யானது என்பது வெளிப்படையாக தெரிகிறது என்றார்.

மேலும், திராவிடர் கழகத்தின் மீது பொய்யான அபாண்டமாக அவதூறு பரப்பி மக்கள் மத்தியில் திராவிடர் கழகத்தைப் பற்றி மோசமான அபிப்பிராயம் உருவாக்கும் வகையில் செயல்பட்டுள்ளார் அண்ணாமலை என்றும்,

அரசியல் சார்பில்லாத ஒரு சமூக சீர்திருத்த இயக்கத்தின் மீது அவதூறு பரப்பி உள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது சட்டப்படியான உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு அரசையும் குறிப்பாக காவல்துறையையும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.