ட்விட்டர் கணக்கை மீட்டுக் கொடுத்ததற்காக டிஜிபி சைலேந்திர பாபுவிற்கு நன்றி - குஷ்பு!
ட்விட்டர் கணக்கை மீட்டுக் கொடுத்ததற்காக தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவிற்கு நடிகை குஷ்பு நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்புவின் ட்விட்டர் கணக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஹேக் செய்யப்பட்டது. 10 லட்சம் பேருக்கு மேல் பின்தொடர்ந்து வந்த நிலையில் குஷ்புவின் ட்விட்டர் கணக்கில் இருந்த பதிவுகள் டெலிட் செய்யப்பட்டது அவரது பெயர் மற்றும் புகைப்படமும் மாற்றம் செய்யப்பட்டது. இது குறித்து குஷ்பு டிஜிபி அலுவலகத்தில் புகாரளித்தார். தனது கணக்கை யாரும் தவறாக பயன்படுத்தி விடக்கூடாது என்பதற்காக புகார் அளித்திருப்பதாக விளக்கம் அளித்தார்.
குஷ்பு அளித்த புகார் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபி சைலேந்திர பாபு மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் படி, இந்த விவகாரத்தை கையிலெடுத்த சைபர் கிரைம் போலீசார் குஷ்புவின் ட்விட்டர் கணக்கை முடக்கியது யார் என்ற விவரத்தை தருமாறும் அந்த கணக்கை மீண்டும் அவரிடமே வழங்குமாறும் ட்விட்டர் நிறுவனத்துக்கு கடிதம் எழுதினர். இதையடுத்து, குஷ்புவின் ட்விட்டர் கணக்கு மீண்டும் அவருக்கே வழங்கப்பட்டுள்ளது. எனினும், ஹேக் செய்தவர்கள் யார் என்பதன் விவரங்கள் தெரியவரவில்லை.
இந்த நிலையில், தனது ட்விட்டர் கணக்கை பாதுகாப்புடன் மீட்டுக் கொடுத்த டிஜிபி சைலேந்திர பாபுவிற்கும் அவரது குழுவினருக்கும் நன்றி தெரிவித்து நடிகை குஷ்பு தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், புதிதாக முகப்பு புகைப்படத்தையும் மாற்றியுள்ளார்.
My gratitude to #DGP #ShylanderBabu ji and his team for their swift action and helping me to retrieve my Twitter account, safe and sound. ????
— KhushbuSundar (@khushsundar) July 24, 2021