பொங்கலுக்கு துணிவு,வாரிசு பார்க்க போகமாட்டேன் - நடிகை குஷ்பு
கோவை மாவட்ட பா.ஜ.க சார்பில் நம்ம ஊர் பொங்கல் திருவிழா இன்று வெள்ளலூரில் நடைபெற்றது. இதில் பா.ஜ.க தேசியக்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கலந்து கொண்டார்.
பெண்களுக்கு பாஜகவில் பாதுகாப்பு இருக்கு
நிகழ்ச்சியில் பெண்களுடன் சேர்ந்து பொங்கல் வைத்தார். பொங்கல் திருவிழாவையொட்டி அங்கு நாட்டுபுற கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.
.தொடர்ந்து அவர் ரேக்ளா பந்தயத்தை தொடங்கி வைத்தார். சிறிது தூரம் ரேக்ளா வண்டியிலும் பயணித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பொங்கல் பண்டிகை நம்முடைய பாரம்பரிய பண்டிகையாகும். இது வீட்டிலும், குடும்பத்திலும் சந்தோஷம் கொடுக்க கூடிய பண்டிகையாகும்.
இந்த பண்டிகையை இங்கு நான் மக்களுடன் சேர்ந்து உற்சாகமாக கொண்டாடி உள்ளேன். இது மகிழ்ச்சியாக உள்ளது.
தமிழக அரசு பொங்கல் பரிசாக மக்களுக்கு ரூ.1000 மட்டுமே கொடுப்பது வெட்கக்கேடானது. தமிழ் கலாசாரத்தை பாதுகாப்பதாக கூறி வரும் தி.மு.க அரசு இவ்வளவு கேவலமாக நடந்து கொள்ளக்கூடாது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மேற்கொள்ளும் பாதயாத்திரையில் கமல்ஹாசன் கலந்து கொண்டது அவரது கட்சியின் தனிப்பட்ட உரிமையாகும். அதில் கருத்து சொல்ல முடியாது.
பா.ஜ.க.வில் எல்லா பெண்களும் கட்சியை விட்டு போகவில்லை. ஒரு சிலர் போவதால் பாதுகாப்பு இல்லை என்று கூறமுடியாது. பா.ஜ.க.வில் இருக்கும் அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு இருக்கிறது. நானும் கட்சியில் தானே இருக்கிறேன்.
தற்போதைய தலைவர் அண்ணாமலை துணிச்சலான தலைவர். துணிச்சலாக பல முடிவுகளை எடுத்து வருகிறார். அவரை பாராட்டுகிறேன்.
வீட்டில் தான் இருப்பேன்
தமிழகம், தமிழ்நாடு என்று சொல்வதால் எந்த தவறும் இல்லை. நான் மும்பையில் பிறந்தாலும் தமிழச்சி தான். 36 ஆண்டுகளாக தமிழகத்தில் தான் உள்ளேன் என்றார்.
செய்தியாளர்கள் அவரிடம் பொங்கலுக்கு துணிவு பார்ப்பீர்களா? வாரிசு பார்ப்பீர்களா என கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் நான் பொங்கலுக்கு எங்கும் போகவில்லை. வீட்டில் தான் இருக்க போறேன். எந்த படத்திற்கு போவார்கள் என்பதை நீங்கள் ரசிகர்களிடம் தான் கேட்க வேண்டும் என்றார்