யாரும் செய்யாத சாதனை - மிகப்பெரும் சாதனைக்கு சொந்தக்காரனாகிய கெய்ல் ஜெமிசன்: ரசிகரக்ள் உற்சாகம்

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூலம் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான கெய்ல் ஜெமிசன் டெஸ்ட் போட்டிகள் புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார். இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டி கான்பூர் மைதானத்தில் 25ம் தேதி துவங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரஹானே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 345 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயஸ் ஐயர் 105 ரன்களும், சுப்மன் கில் 52 ரன்களும், ஜடேஜா 50 ரன்களும் எடுத்தனர்.

இதனையடுத்து முதல் இன்னிங்ஸை துவங்கிய நியூசிலாந்து அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான டாம் லதாம் 95 ரன்களும், வில் யங் 89 ரன்களும் எடுத்து கொடுத்தாலும் அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ரன் குவிக்காமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறியதால் 296 ரன்கள் எடுத்த நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக அக்‌ஷர் பட்டேல் 5 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திர அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்பின் 49 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணிக்கு சுப்மன் கில் 1 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார். இதனால் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட்டுகளை இழந்துள்ள இந்திய அணி 14 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தநிலையில், இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சுப்மன் கில்லின் விக்கெட்டை வீழ்த்திய போது, டெஸ்ட் போட்டிகளில் தனது 50வது விக்கெட்டை பதிவு செய்த நியூசிலாந்து அணியின் கெய்ல் ஜெமிசன், இதன் மூலம் மிகப்பெரும் சாதனை ஒன்றிற்கு சொந்தக்காரராகியுள்ளார். வெறும் 9 இன்னிங்ஸில் 50 விக்கெட்டுகள் வீழ்த்திய கெய்ல் ஜெமிசன் இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து அணிக்காக மிக குறைந்த இன்னிங்ஸில் 50 விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

முன்னதாக சேன் பாண்ட் 10 இன்னிங்ஸில் 50 விக்கெட் வீழ்த்தியிருந்ததே சாதனையாக இருந்தது, தற்போது இதனை கெய்ல் ஜெமிசன் முறியடித்துள்ளார். அதே போல் 20ம் நூற்றாண்டில் மிக குறைந்த பந்துகளில் 50 விக்கெட் வீழ்த்திய பட்டியலில் கெய்ல் ஜெமிசன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்