அமேசான், நெட்பிளிக்சிற்கு சவால் விடும் கேரள அரசு: சொந்தமாக ஓடிடி தளம் உருவாக்க பரிசீலனை
அரசு சொந்தமாக ஓடிடி தளத்தை உருவாக்க வேண்டும் என்று மலையாள திரைநட்சத்திரங்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அதனை பரிசீலிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
கொரோனாவால் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில் ஆன்லைன் ஓடிடி தளங்கள் மூலம் திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. இதில் 17 மாத காலகட்டத்தில் மலையாள திரையுலகம் ரூ.900 கோடிக்கும் அதிகமாக இழப்பை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் தடைபட்டுள்ள படங்களை வெளியிடுவதற்கு கேரள அரசு சொந்த ஓடிடி தளத்தை உருவாக்க வேண்டும் என்று மலையாள திரைநட்சத்திரங்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இது விரைவில் நிறைவேற்றப்படும் என கேரள சினிமா மற்றும் கலாசாரத்துறை அமைச்சர் சஜி செரியன் தெரிவித்துள்ளார்.

மேலும் பெரிய நட்சத்திரங்கள் நடித்த படங்களுக்கு இந்த வசதி தேவையில்லை என்றாலும், சாதாரண படங்களுக்கு தேவைப்படும் என்பதால், புதிய ஓடிடி தளத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும்,மலையாள திரையுலகம் நவீனமயமாக்கப்படும் விதமாக பெரிய அளவில் மாற்றங்களைச் செய்ய முயற்சித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதேபோல் அரசு நடத்தும் சித்ராஞ்சலி ஸ்டூடியோ தென்னிந்திய படங்களின் படப்பிடிப்புக்கான இடமாக மாற்றப்படும் என்று அமைச்சர் சஜி செரியன் தெரிவித்துள்ளார்.