மரத்துப்போன மனிதநேயம்…பறவைகளுடன் சாய்க்கப்பட்ட மரம் உயிரிழந்த பறவைகள் - ஜேசிபி ஓட்டுநர் கைது

Viral Video Kerala
By Nandhini Sep 02, 2022 11:13 AM GMT
Report

புல்டோசர் கொண்டு வீழ்த்தப்பட்ட மரத்தின் கூடுகளில் இருந்த பறவைக் குஞ்சுகள் தரையில் விழுந்து உயிரிழந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானதையடுத்து ஜேசிபி ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்.

புல்டோசர் கொண்டு வீழ்த்தப்பட்ட மரம்

கேரள மாநிலம், மலப்புரம் அருகே சாலை விரிவாக்க பணிகளுக்காக புல்டோசர் கொண்டு சாலையோரத்தில் இருந்த ஒரு பெரிய மரத்தை வெட்டி சாய்த்தனர். அப்போது, அந்த மரம் வேரோடு சாலையில் விழுந்தது.

மரம் விழுந்தபோது, மரத்தில் இருந்த எண்ணற்ற பறவை கூடுகள் சாலையில் விழுந்து நொறுங்கின. அந்த கூட்டில் இருந்த ஏராளமான பறவை குஞ்சுகள் கீழே விழுந்து துடிதுடித்து பரிதாபமாக இறந்தன. இதை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். 

kerala - tree - viral video

ஜேசிபி ஓட்டுநர் கைது

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து கேரள வனத்துறையினர் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதிகாரப்பூர்வ அனுமதியின்றி மரம் வெட்டப்பட்டதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, ஜேசிபி ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர். 

வனத்துறை அமைச்சர் எச்சரிக்கை

இது குறித்து வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரன் பேசுகையில், இச்சம்பவம் கொடூரமானது. இது தனது துறையின் அனுமதியின்றி நடந்துள்ளது. பறவைகள் மற்றும் கூடுகளைக் கொண்ட மரங்களை அவை மறையும் வரை வெட்டக்கூடாது என்று வனத்துறையின் கடுமையான வழிகாட்டுதல்களில் உள்ளன என்றார்.

இது குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் முஹம்மது ரியாஸ், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் அறிக்கை கேட்டுள்ளார்.

நீலம்பூர் வடக்கு கோட்ட அலுவலர் பேசுகையில், இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.