ஓடும் ரயிலுக்கு தீ; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு - நோன்பு திறக்க சென்று விட்டு திரும்புகையில் நடந்த சோகம்!
கேரளாவில் ஓடும் ரயிலில் மர்ம நபர் ஒருவர் தீ வைத்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழந்தை உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஓடும் ரயிலுக்கு தீ வைத்த நபர்
நேற்று இரவு கோழிக்கோடு மாவட்டம் எலத்தூர் அருகே ஆலப்புழா-கண்ணூர் மெயின் எக்ஸிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது.
அப்போது டி1 பெட்டிக்கு வந்த நபர் ஒருவர் திடீரென தனது பேக்கில் பாட்டிலில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து பயணிகள் மீது ஊற்றியுள்ளார்.
பின்னர் தீ வைத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் ஓடும் ரயிலுக்குள் ஓடியுள்ளனர். இதில் 9 பேர் தீ காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
3 பேர் உயிரிழந்த பரிதாபம்
இந்த நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு குழந்தை உட்பட 3 பேரின் உடல்கள் தண்டவாளத்தில் இருந்து கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தில் நவ்பீக்,ரஹ்மத்,சாஹாரா உள்ளிட்ட 3 பேரும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்றும் அவர்கள் ரமலான் நோன்பு காலம் என்பதால் நோன்பு வைத்துவிட்டு அதை திறப்பதற்காக கோழிக்கோடு சென்று விட்டு திரும்புகையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என்றும் தெரியவந்துள்ளது.
நவ்பீக்கிற்கு 3 குழந்தைகள் உள்ளதாகவும் அதில் கடைசி மகள் இந்த சம்பவத்தில் உயிரிழந்துவிட்டதாகவும் அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.
ரயிலுக்கு தீ வைத்த நபர் இவர்களை ரயிலில் இருந்து தள்ளிவிட்டாரா? அல்லது தீ வைத்ததை பார்த்து பயந்து ஓடும் ரயிலில் இருந்து குதித்தனரா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.