“நகை என்னங்க நகை...நான் உங்க தங்கச்சிய தான்ங்க விரும்புனேன்” - கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம்
தங்கையின் திருமணத்திற்கு நகை வாங்க முடியாததால் மணமுடைந்த அண்ணன் தற்கொலை செய்து கொள்ள, நிச்சயித்தப் பெண்ணை கைவிடாமல் இளைஞர் கரம் பிடித்த சம்பவம் ஒட்டுமொத்த கேரளாவையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கேரள மாநிலம் திரிசூரைச் சேர்ந்தவர் விபின். இவரது சகோதரி வித்யா. இவருக்கும் வெளிநாட்டில் வேலை பார்க்கும் நிதின் என்பவருக்கும் திருமணம் நிச்சயமானது.
தங்கையின் திருமணத்திற்காக விபின் வங்கியில் கடன் கேட்டிருந்தார். ஆனால் அவருக்குக் கடன் கொடுக்கப்படவில்லை. இதனால், ஏமாற்றமடைந்த விபின் தங்கையையும், தாயையும் நகைக்கடைக்கு அழைத்துச் சென்றார்.
பின்னர் கடையில் அவர்கள் இருவரையும் விட்டுவிட்டு வீடு திரும்பிய அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் வித்யாவுக்காகப் பேசப்பட்ட இளைஞர் நிதின் திட்டமிட்டபடி வித்யாவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர், திருமணத்துக்காக நாங்கள் வரதட்சணை ஏதும் கேட்கவில்லை எனவும் வித்யாவுக்கு நகை போடவேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை எனவும் அதனால் அவரை திருமணம் செய்து கொண்டேன் என்றார்.