மரம் வளர்த்தால் வட்டியில்லா கடன்- எங்கு தெரியுமா?
கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் மரங்களை வெட்டாமல் வளர்க்கும் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் கொடுத்து அசத்தி வருகிறது வயநாடு மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்து நிர்வாகம் ஒன்று.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள மீனங்காடி பஞ்சாயத்தில் மரங்களின் வங்கி திட்டம் என்ற பெயரில் கார்பன் சமநிலையை உருவாக்கும் திட்டம் உள்ளது. இந்த திட்டம் ,பாரீசில் நடைபெறும் காலநிலை மாற்றம் குறித்த மாநாட்டை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதாகும்.
அதன்படி, கேரளாவின், வயநாடு பகுதி காலநிலை மாற்றங்களால் அதிகம் பாதிக்கபட்ட பகுதி என்பதால் இந்த திட்டம் இங்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது அதன்படி இங்கு உள்ள கார்பன் வாயுக்கள் அளவை குறைக்க 2 ஆண்டுகள் ஆய்வு நடத்தி இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் 19 வார்டுகளில் இதுவரை மூன்று லட்சம் மரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனை கண்காணிப்பதற்காக பிரத்யேக குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி கடன் பெறும் ஒரு விவசாயி 100 மரங்களை 10 ஆண்டுகளுக்கு வெட்டாமல் வளர்த்தால் அவருக்கு தவணைத் தொகையாக ரூ.50, 000 கிடைக்கும்.
மேலும் அவர்களுக்கு வங்கிக்கடனும் எளிதாக கிடைக்கும். அதேசமயம் ஒரே ஒரு மரத்தை வெட்டினாலும் கடன் தொகையை உடனடியாக கொடுத்தாக வேண்டும் என்பதும் விதியாக உள்ளது .
இந்த திட்டம் வயநாடு பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.