கொரோனா சிகிச்சை: தனியார் மருத்துவமனைகளின் கட்டண கொள்ளைக்கு கடிவாளம் போட்ட பினராயி அரசு!
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மிகத் தீவிரமாக இருந்து வருகிற நிலையில் கேரளா மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் கேரளாவில் அதிக அளவில் இருந்து வருகிறது. கேரளாவின் சுகாதார கட்டமைப்பு வலுவாக உள்ளதால் பெரும் சுமை ஏற்படவில்லை என்றாலும் இனி வரும் நாட்களில் கேரளா கடுமையான நெருக்கடியை சந்திக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால் அரசு மருத்துவமனைகளை தாண்டி கேரளாவில் தனியார் மருத்துவமனைகளும் நிரம்பி வழிகின்றன. ஆனால் கேரள மாநிலத்தில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணையில் பதிலளித்த கேரள அரசு, ”தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான பொது வார்டுகளில், நாள் ஒன்றுக்கு ரூ.2,645 மட்டுமே வசூலிக்கப்படும். மேலும் சி.டி.ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகளுக்கும் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது
இதனை மீறும் பட்சத்தில் மாவட்ட மருத்துவ அதிகாரி உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தால், சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகத்திடம் பத்து மடங்கு அபராதம் வசூலிக்கப்படும் என்றும் கேரள அரசு நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது. இதையடுத்து கேரள அரசின் நடவடிக்கைக்கு கேரள உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.