நிமிஷா பிரியா மரண தண்டனை ரத்து? விரைவில் இந்தியா திரும்புவார் - உண்மை நிலவரம் இதுதான்!
நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிமிஷா பிரியா
கேரளாவைச் சேர்ந்த நர்ஸ் நிமிஷா பிரியா ஏமன் அந்நாட்டைச் சேர்ந்த தலாலு அப்துல் மஹ்தி என்பவரைக் கொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கிறார்.
அவரது தண்டனையைத் தடுப்பதற்கான தொடர் முயற்சிகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஜூலை 16ஆம் தேதி நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக சனாவில் உள்ள ஏமன் சிறைத்துறை அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் இந்திய அரசு தொடர்ந்து தூதரக ரீதியிலான முயற்சிகளை மேற்கொண்டது. இந்நிலையில், இந்தியாவின் கிராண்ட் முஃப்தி என அறியப்படும் ஷேக் காந்தபுரம் ஏ.பி. அபூபக்கர் முஸ்லியார் இந்த விவகாரத்தில் தலையிட்டதில் தண்டனை தள்ளிவைக்கப்பட்டது.
மரண தண்டனை ரத்து?
இந்நிலையில் உலகளாவிய அமைதி முயற்சியின் நிறுவனர் டாக்டர் கே.ஏ.பால் ஏமன் நாட்டில் சனாவில் இருந்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், "கடந்த பத்து நாட்களாக இரவு பகலாக அயராது உழைத்து, தலைவர்கள் இப்பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவர முயன்றனர்.
நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ரத்து செய்ய உதவிய தலைவர்கள் அனைவருக்கும் நன்றி. இது ஒரு பெரிய வெற்றி. இதை அடையக் காரணமாக இருந்த அனைத்துத் தலைவர்களுக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன். கடவுளின் அருளால், அவர் விடுவிக்கப்பட்டு இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்படுவார்.
தூதர்களை அனுப்பி நிமிஷாவை பத்திரமாக இந்தியா அழைத்து வர ஏற்பாடு செய்தமைக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சனா சிறையிலிருந்து ஓமன், ஜெட்டா, எகிப்து, ஈரான் அல்லது துருக்கிக்கு இந்திய அரசுடன் இணைந்து பாதுகாப்பாகத் திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
இருப்பினும் ஏமன் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக இது குறித்து எந்தவொரு அறிவிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.