நடிகையின் மரணத்தில் நீடிக்கும் மர்மம் : பிரேத பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
கேரளாவில் இளம் நடிகை சஹானா தனது வீட்டில் மர்மமான முறையில் மரணமடைந்து பரபரப்பை கிளப்பிய நிலையில் பிரேத பரிசோதனையில் சஹானாவின் உடலில் சிறு காயங்கள் இருந்தது தெரியவந்துள்ளது.
கேரள மாநிலம் காசர்கோட் மாவட்டம் செருவத்தூரை சேர்ந்தவர் நடிகை சஹானா. பிரபல மாடலாகவும் நடிகையாகவும் இருந்தார். ஏராளமான விளம்பர படங்களில் நடித்துள்ள சஹானாவுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கோழிக்கோடைச் சேர்ந்த சஜாத் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணத்திற்கு பிறகு சஹானா கோழிக்கோடில் கணவர் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். கத்தாரில் வேலை பார்த்து வந்த சஜாத், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளா வந்துள்ளார்.
கணவர் குடும்பத்தினருடன் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்ததை அடுத்து பரம்பில் பஸார் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர்.
இந்நிலையில் சஹானா தனது 21-வது பிறந்த நாளன்று இரவு மர்மமான முறையில் அவரது வீட்டில் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து வீட்டின் உரிமையாளர் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அவரது கணவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், சஹானா ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கான வாய்ப்பு இல்லை என்பதை அறிந்த போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சஹானாவின் அம்மா தனது மகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் அவரை அவரது கணவரே கொன்றுவிட்டு நாடகமாடுகிறார் என குற்றம்சாட்டியுள்ளார்.
இதற்கிடையே போலீசார் சஹானாவின் படுக்கை அறையை சோதனை செய்ததில் அங்கு கஞ்சா மற்றும் சில போதை பொருட்கள் இருந்ததை கண்டுப்பிடித்துள்ளனர். மேலும், இது தொடர்பாக அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தியதில் சஹானாவும், அவரது கணவரும் அடிக்கடி வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் அவர்களை வீட்டை காலி செய்யும்படி வீட்டின் உரிமையாளர் ஏற்கனவே கூறியிருந்ததாகவும் கூறினர்.
இந்நிலையில், பிரேத பரிசோதனையில் சஹானாவின் உடலில் சிறு காயங்கள் இருந்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பான அறிக்கையை மருத்துவர்கள் போலீசாரிடம் அளித்துள்ளனர்.
அதனை காவல் துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். முதற்கட்டமாக அவர்கள் சஹானாவின் கணவர் சஜாத்தை கைது செய்தனர்.
நேற்று அவரிடம் விசாரணை நடத்திய போலீசார் இன்று பிற்பகல் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறார்கள். பின்னர் மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.