"அப்பா நீங்கள் சொன்னது சரிதான் சுஹைல் நல்லவன் கிடையாது" - கேரளத்தை உலுக்கும் தற்கொலை சம்பவங்கள்
சமீப காலமாக கேரள மாநிலத்தில் வரதட்சணை கொடுமைகளால் அடுத்தடுத்து தற்கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் மீண்டும் கேரள மாநிலத்தையே உலுக்கி வருகிறது.
கேரளாவின் ஆலுவா பகுதியை சேர்ந்தவர் மோபியா பர்வீன். தொடுபுழாவில் உள்ள சட்டக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த இவருக்கு பேஸ்புக் மூலம் முகமது சுஹைல் என்பவர் பழக்கமாகியிருக்கிறார். நாளடைவில் காதலாக மாறிய இவர்களது நட்பு திருமணத்தில் போய் முடிந்திருக்கிறது
.கடந்த ஏப்ரல் மாதம் மோபியாவை திருமணம் செய்து கொண்ட சுஹைல் தான் துபாயில் பணியாற்றி வருவதாக மோபியாவிடமும் அவரது குடும்பத்தினரிடமும் தெரிவித்திருக்கிறார்.
மோபியா பிரீலான்ஸ் டிசைனராக இருந்து வருமானத்தை ஈட்டிவந்த நிலையில் ஒரு நாள் சுஹைல் திடீரென தான் ஒரு திரைப்படத்தை தயாரிக்க விரும்புவதாகவும் அதற்காக 40 லட்சம் தேவைப்படுவதாகவும் அதை தனது வீட்டில் வாங்கித் தருமாறும் மோபியாவிடம் கேட்டுள்ளார்.
வரதட்சணையை சிறிதும் விரும்பாத மொபியாவிற்கு இது பேரதிர்ச்சியாக இருந்ததை தொடர்ந்து அவர் சுஹைல் கேட்டதை மறுத்துவிட்டார்.அதுமுதல் இருவருக்கும் பிரச்சனைகள் தொடர்ந்து இருந்துவந்துள்ளது .
மேலும் சுஹைலுக்கு எந்த வேலையும் இல்லை என்பதும் முழுக்க மோபியாவின் வருமானத்தையே அவர் நம்பியிருந்ததும் பின்னர் தான் தெரியவந்துள்ளது. சுஹைல் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு தொடர்ந்து துன்புறுத்தி வந்ததால் ஒருகட்டத்தில் ஆலுவா போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்திருக்கிறார் மோபியா.
காவல் நிலையத்தில் வைத்து மோபியாவின் பெற்றோர்களை சுஹைல் தரைகுறைவாக பேசியதையடுத்து சுஹைலை காவல் நிலையத்திலேயே கன்னத்தில் அரைந்துள்ளார் மோபியா.
இதனை தொடர்ந்து காவல் நிலையத்தின் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சுதீர் மிகவும் கடுமையாக நடந்து கொண்டதாகவும் அதனால் மோபியாவுக்கு மன உளைச்சல் ஏற்பட்டு அவர் சோர்வாக இருந்ததாகவும் அவரது தந்தை தெரிவித்தார்.
இதே நிலையில் வீட்டிற்கு வந்த சில மணி நேரத்தில் மோபியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் "எனது சாவுக்கு கணவர் சுஹைல், அவரது பெற்றோர் யூசூப்- ருகியா, ஆலுவா போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுதிர் ஆகியோர் தான் காரணம்.
அப்பா நீங்கள் சொன்னது சரி. சுஹைல் நல்லவன் கிடையாது” என கடிதம் ஒன்றையும் எழுதி வைத்திருக்கிறார் மோபியா. இந்த சம்பவம் தான் தற்போது கேரளா மாநிலத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.