நீதிபதிகள் தெய்வங்கள் அல்ல! நீதிமன்றத்தில் கும்பிட்டபடி நின்ற பெண்ணுக்கு நீதிபதி அறிவுரை!
யாராக இருந்தாலும் நீதிபதி முன்பாக சாமியை கும்பிடுவது போல் நிற்க வேண்டியதில்லை என்று கேரள உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை வழங்கியுள்ளார்.
வழக்கு தொடர்ந்த பெண்
கடந்த 2019ம் ஆண்டு கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில் தனது வீடு அருகே ஒலிப்பெருக்கியை கட்டிக்கொண்டு சிலர் ஆராதனைகள் நடத்துவதால் வீட்டில் குடியிருக்க முடியவில்லை என கூறியிருந்தார்.
இந்த புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு புகாரை அனுப்பி விசாரிக்க உத்தரவிட்டார். புகார் கொடுத்த பெண்ணிடம் விசாரிக்க சென்ற போது தங்களை அவமரியாதை செய்ததாகவும், தரக்குறைவாக திட்டியதாகவும் அந்த பெண் மீதே போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து தன் மீதான பொய் வழக்கை குவாஷ் செய்யுமாறு கேரள உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார் அந்த பெண்.
நீதிபதி அறிவுரை
இந்நிலையில் நேற்று நடந்த வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் கும்பிட்டபடி நின்றிருந்த அந்த பெண்ணை பார்த்த நீதிபதி குன்ஹிகிருஷ்ணன் "'நீதியின் கோவிலாக நீதிமன்றங்கள் உள்ள போதும் நீதிபதிகள் தெய்வங்கள் அல்ல.
இதனால் நீதிமன்றத்துக்கு வரும் பாதிக்கப்பட்டவர்கள், வழக்கறிஞர்கள் உட்பட யாராக இருந்தாலும் நீதிபதி முன்பாக சாமியை கும்பிடுவது போல் நிற்க வேண்டியதில்லை. நீதிமன்றத்திற்குள் வரும்போது அதற்குரிய கண்ணியத்துடனும், மரியாதையுடனும் நடந்துகொண்டாலே போதுமானது.
கையெடுத்து கும்பிட்டுக் கொண்டு நிற்க தேவையில்லை" என்று நீதிபதி அறிவுரை வழங்கினார். அதுமட்டுமல்லாமல் பெண்ணின் மனுவை விசாரித்த நீதிபதி போலீஸார் பதிந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் புகார் கொடுத்த பெண் மீதே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த பின்னணி குறித்து விசாரிக்க உத்தரவிட்டார்.
You May Like This Video