"வரதட்சணை இல்லாமல் திருமணம்' - மாநில அரசின் புதிய திட்டம்
வரதட்சணை கொடுமையை ஒழிக்க கேரள அரசு புதிய நடைமுறையை அமலுக்கு கொண்டு வந்துள்ளது.
கேரளாவில் வரதட்சணை விவகாரத்தால் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், சமீபத்தில் நிகழ்ந்த இளம் பெண்களின் மரணங்களும் அங்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தடுக்க முதல்வர் பினாராயி விஜயன் தலைமையிலான மாநில அரசு புதிய முடிவு ஒன்றை கையில் எடுத்துள்ளது.
அதன்படி அரசு வேலை செய்து வரும் ஆண் ஊழியர்கள் அனைவரும் ‘வரதட்சணை வாங்கவில்லை’ என்ற உறுதிமொழி பத்திரத்தை அவர்களது தலைமை அதிகாரிகளிடம் சமர்பிக்க வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் இந்த பத்திரத்தை அதிகபட்சம் 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், உறுதிமொழி பத்திரத்தில் ஆண் ஊழியரின் மனைவி, தந்தை மற்றும் மாமனார் என மூவரது கையொப்பம் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.