காதலை ஏற்க மறுத்த இளம்பெண் எறித்து கொலை - வரதட்சணை தற்கொலைகளை தொடர்ந்து கேரளத்தில் மீண்டும் பயங்கரம்
காதலிக்க மறுத்தப் பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்றுவிட்டு, இளைஞர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகில் உள்ள திகோடியை சேர்ந்தவர் சிந்தூரி என்ற கிருஷ்ணப்பிரியா (22).
முதுகலை கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ள இவர், திகோடி பஞ்சாயத்து அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக கடந்த 8 நாட்களுக்கு முன் சேர்ந்தார்.
அதே பகுதியைச் சேர்ந்த 26 வயதான நந்தகுமார் கடந்த சில மாதங்களாக கிருஷ்ணப்பிரியாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
கூலித் தொழிலாளியான இவர் ஒரு கட்டத்தில் தனது காதலை கிருஷ்ணப்பிரியாவிடம் தெரிவிக்க, அவர் ஏற்க மறுத்துவிட்டார்.
இருந்தும் தொடர்ந்து கிருஷ்ணப்பிரியாவை அவர் தொந்தரவு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் திகோடி பஞ்சாயத்து அலுவலகத்துக்கு, கிருஷ்ணப் பிரியா வழக்கம்போல நேற்று காலை வந்தார்.
அவரைப் பின் தொடர்ந்து வந்த நந்தகுமார், மீண்டும் தனது காதலை ஏற்கும்படி வற்புறுத்தியுள்ளார். அவர் மறுத்து திட்டியதாகத் தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அவர், தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை திடீரென அவர் மீது ஊற்றி தீவைத்தார்.
இதற்கிடையே பஞ்சாயத்து அலுவகத்தின் வெளியே வந்த நந்தகுமார் தனது மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டார்.
இருவரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து இருவரையும் மருத்துவமனையின் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி கிருஷ்ணப்பிரியா உயிரிழந்தார். நந்தகுமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது போன்ற ஒருதலை காதல் மற்றும் வரதட்சணை கொடுமை காரணமாக கேரளாவில் பெண்கள் கொல்லப்படுவது சமீப காலமாக அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.