கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்
கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமாகியுள்ளார்.
அச்சுதானந்தன்
கேரளாவின் ஆலப்புழை மாவட்டத்தில் ஏழ்மை குடும்பத்தில் பிறந்த அச்சுதானந்தன், 4 வயதில் தாயையும், 11 வயதில் தந்தையும் இழந்தார்.
இதன் காரணமாக, ஏழாவது வகுப்புடன் பள்ளிக் கல்வியை நிறுத்தும் கட்டாயம் ஏற்பட்டது. அதன் பிறகு, துணிக் கடை மற்றும் கயிறுத் தொழிற்சாலையில் பணிபுரிந்தார்.
தொழில் சங்க ஈடுபாட்டின் மூலம் அரசியலுக்கு வந்த அவர், 1938ஆம் ஆண்டு மாநில கங்கிரஸில் சேர்ந்தார். கருத்து வேறுபாடுகளால், 1940ஆம் ஆண்டு காங்கிரஸிலிருந்து விலகி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினர் ஆனார்.
அதை தொடர்ந்து இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கு அளித்த காரணத்தால், 5 வருடத்துக்கும் மேலாகச் சிறையில் அடைக்கப்பட்டார்.
1964ஆம் ஆண்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்து சென்று மார்க்சிஸ்ட் கட்சியை நிறுவிய 32 உறுப்பினர்களுள் இவரும் ஒருவர்.
2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை கேரள மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தார். 82 வயதில் தனது முதல்வர் பதவியை ஏற்றார்.
102 வயதில் காலமானார்
15 ஆண்டுகள் எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றிய அவர், கேரள சட்டமன்றத்தில் மிக நீண்ட காலம் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றியவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
102 வயதான அச்சுதானந்தன் வயது மூப்பு காரணமாக பொது வாழ்க்கையில் இருந்து விலகி இருந்த நிலையில், ஏற்கனவே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த ஜூன் 23 ஆம் தேதி மாரடைப்பு மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக திருவனந்தபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து, வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.