கேரளாவை மீண்டும் உலுக்கிய வரதட்சணை கொடுமை - சாகும் முன் சகோதரருக்கு அனுப்பிய அதிர்ச்சி ஆடியோ
கேரளாவில், என்னை சித்திரவதை செய்கிறார்கள். சொகுசு கார் வாங்க பணம் கேட்டு சித்திரவதை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. என்னை வந்து அழைத்துச் செல்லுங்கள் என்று சகோதரருக்கு ஆடியோ அனுப்பியும், தன் உடல் முழுவதும் கீறல்கள் இருந்த புகைப்படங்களை வாட்ஸ்அப் மூலம் தனது குடும்பத்தினருக்கு அனுப்பி வைத்து மருத்துவ மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவையே உலுக்கி எடுத்தது அந்த வரதட்சனை கொடுமை மரணம். அதன் பின்னர் அடுத்தடுத்து கேரளாவில் வரதட்சனை கொடுமையால் இளம்பெண்கள் மரணங்கள் நடந்தபோது அரசு கடுமையான நடவடிக்கை எடுப்பதாக அறிவித்திருந்தது.
இந்நிலையில் மீண்டும் வரதட்சணை கொடுமையால் கேரளாவில் ஒரு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். சுனிஷா என்ற பெண்ணுக்கும் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜீஸ் என்பவருக்கும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
இந்த நிலையில் சுனிஷா உயிரிழந்து கிடப்பதாக பெற்றோருக்கு தகவல் கிடைத்துள்ளது. தங்களது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சுனிஷாவின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதை தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சுனிஷா தனது சகோதரருக்கு சாகும் முன் ஆடியோ ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், உங்களால் முடிந்தால் தயவு செய்து இப்போதே வாருங்கள் என்னை அழைத்துச் செல்லுங்கள். நான் வர தயாராக இருக்கிறேன். கணவரும் அவரது தாயாரும் என்னை அடித்து துன்புறுத்துகிறார்கள். இன்றிரவு நான் உயிரோடு இருப்பேனா என்று கூட தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
இந்த ஆடியோவை கைப்பற்றிய போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விஜீஸின் குடும்பம் செல்வாக்கு என்பதால் போலீசார் விசாரணையில் மெத்தனம் காட்டுவதாக சுனிஷாவின் குடும்பத்தார் கதறி வருகின்றனர்.