கணவன் பலாத்காரம் செய்ய சட்டத்தில் இடமில்லை ஆனால் விவாகரத்து கோர முடியும் - நீதிமன்றம் அதிரடி!
கணவன் பலாத்காரம் செய்வதை தண்டிப்பதற்கு சட்டத்தில் இடமில்லை என்றாலும் அந்த கணவனிடமிருந்து மனைவி விவாகரத்து கோர முடியும் என்று கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது.
கேரள மாநிலத்தில் உள்ள மருத்துவர் ஒருவர் திருமணத்திற்குப் பின்னர் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். அந்த தொழிலில் சரியான வருமானம் இல்லாமல் முடங்கி இருக்கிறார். இதன் பின்னர் மனைவியின் வருமானத்தில்தான் குடும்பம் நடந்து இருக்கிறது. இந்த சூழ்நிலையில் கணவரிடமிருந்து விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார் மனைவி.
அந்த மனுவில், தனது கணவர் பாலியல் ரீதியாக தனது விருப்பமின்றி தன்னை பலாத்காரம் செய்ததாகவும், இதனால் உடல்ரீதியாகவும் , மன ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு விசாரணை நடந்து 12 ஆண்டுகளுக்குப் பின் குடும்ப நல நீதிமன்றம் இருவருக்கும் விவாகரத்து வழங்கியது.
அந்த உத்தரவில், மனைவியை பணம் காய்க்கும் மரமாக நடத்தி வந்திருக்கிறார் அவரது கணவர் என்று நீதிபதி காட்டமாக தெரிவித்திருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து, கேரள உயர் நீதிமன்றத்தில் கணவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்ற நீதிபதி, மனைவியின் விருப்பம் இல்லாமல் பாலியல் பலாத்காரம் செய்யும்
கணவனை தண்டிப்பதற்கு சட்டத்தில் இடமில்லை. ஆனால் மனைவியின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மதிக்காமல் அவரை துன்புறுத்தி வருவதும் கூட பாலியல் பலாத்கார வகையில் சேரும். அதனால் இதுபோன்ற
வழக்குகளில் மனைவி விவகாரத்து கோரி பெற முடியும். கணவனின் இந்த நடத்தை அதற்கு வழிவகுக்கிறது. அதனால் குடும்ப நல நீதிமன்றம் வழங்கிய விவாகரத்து உத்தரவை உறுதி செய்யப்படுகிறது என்று பரபரப்பு
தீர்ப்பு அளித்தார்.