நடிகை பலாத்கார வழக்கு : நடிகர் விஜய் பாபுவுக்கு கேரள நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
மலையாளத்தில் பிரபல நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் நடிகர் விஜய் பாபு. இவர் மீது இளம் நடிகை ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ள நிலையில், மற்றொரு பெண் புகார் கொடுத்துள்ள சம்பவம் கேரளா சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மலையாளத்தில் பல வெற்றி படங்களை கொடுத்துள்ள நடிகர் விஜய் பாபு, ஃபிரைடே ஃபிலிம் ஹவுஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவருடைய ‘பிலிப்ஸ் அண்ட் தி மங்கி பென்’ என்ற படம் கேரளா மாநிலத்தின் சிறந்த திரைப்பட விருதை வென்றது.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 22-ம் தேதி நடிகர் விஜய் பாபு மீது, இளம் நடிகை ஒருவர் போலீசில் பாலியல் புகார் அளித்தார். அந்த புகாரில், விஜய்பாபு தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றத்தை தனது ஃபேஸ்புக் லைவ்வில் வந்து நடிகர் விஜய் பாபு மறுப்பு தெரிவித்தார். நடிகை தொடர்ந்திருக்கும் வழக்கை எதிர்த்து மான பங்க வழக்கு தொடுக்க போகிறேன் என்று பேசினார்.
இதனை தொடர்ந்து வெளிநாடு தப்பி சென்ற அவரை பிடிக்க கேரள போலீசார் இன்டர்போல் போலீசாரின் உதவியை நாடினர். போலீசாரின் தேடுதல் வேட்டை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து நடிகர் விஜய்பாபு ஜார்ஜியா நாட்டுக்கு தப்பி சென்றதாக கூறப்பட்டது.
அங்கிருந்து விஜய் பாபுவை இந்தியா அழைத்து வர போலீசார் முயற்சி மேற்கொண்டனர். இதற்கிடையே இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க கேட்டு நடிகர் விஜய்பாபு கேரள நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீது நேற்று விசாரணை நடந்த நிலையில், மனுவை விசாரித்த நீதிமன்றம், நடிகர் விஜய் பாபுவுக்கு முன்ஜாமீன் வழங்க அவர் கேரளா திரும்ப வேண்டும் என்றும் இதற்கான விமான டிக்கெட்டை அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தது.
மேலும், அவர் டிக்கெட்டை தாக்கல் செய்த பின்பு அவரது ஜாமீன்மனு பரிசீலனை செய்யப்படும் என்று நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.