அதிவேகமாக பரவும் பறவைக் காய்ச்சல் - கேரள இறைச்சிக்கு தமிழ்நாட்டில் தடை

kerala-corona-virus-india
By Jon Jan 08, 2021 02:43 PM GMT
Report

கேரளாவில் இருந்து கோழிகள், வாத்துக்கள், முட்டைகள் தமிழ்நாடு கொண்டு வர தமிழக அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், "கேரள மாநிலத்தின், ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் வாத்துகளில் பறவைக் காய்ச்சல் நோய் கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய அரசு 04.01.2021 அன்று அறிவிப்பு வெளியிட்டது.

கடந்த ஐந்து வருடங்களில் தமிழ்நாட்டின் அண்டைய மாநிலங்களான கர்நாடாகா மற்றும் கேரளா மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் நோய்க்கிளர்ச்சி ஏற்பட்ட போதெல்லாம் தமிழக அரசின் துரித நடவடிக்கை மற்றும் ஏற்கனவே தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வரும் தீவிர நோய்கண்காணிப்பு நடவடிக்கைகளால் இதுவரை தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் நோய்க்கிளர்ச்சி ஏற்படவில்லை.

தற்போது கேரளமாநிலத்தில் ஏற்பட்டுள்ள நோய்க்கிளர்ச்சியினை தொடர்ந்து, தமிழ்நாட்டில் மாண்புமிகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலுக்கிணங்க, கால்நடை பராமரிப்புத்துறை அரசு முதன்மைச் செயலர் அவர்களின் அறிவுரையின்படி, பறவைக்காய்ச்சல் நோய் தொற்று பரவாமல் தடுப்பது தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கேரள மாநிலத்தை தவிர்த்து பிற மாநிலங்களிலிருந்து கோழிக்குஞ்சுகள், முட்டைகள் மற்றும் தீவனம் போன்ற பொருட்களை பெறுவதாக இருந்தால் உரிய அரசு அலுவலர்களிடமிருந்து முறையாக சான்றிதழ் பெற்ற பின்னரே கொள்முதல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மாநிலத்திலுள்ள அனைத்து கோழிப் பண்ணைகளிலும் தீவிர உயிரி பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றிட கோழிப்பண்ணையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கோழிகளில் பெரிய அளவில் சந்தேகத்திற்குரிய திடீர் இறப்புகள் ஏதேனும் ஏற்படின் அருகிலுள்ள கால்நடை மருத்துவரிடம் விவரம் உடனடியாக தெரிவிக்க வேண்டும்.

நன்கு சமைத்த கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை உண்பதால் பறவைக்காய்ச்சல் நோய் மனிதர்களுக்கு பரவாது. மேலும், இப்பறவைக்காய்ச்சல் மனிதர்களுக்கு பரவும் வாய்ப்பு மிகவும் குறைவு. எனவே, இந்நோய் குறித்து பொதுமக்கள் வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

கேரள மாநிலித்திலிருந்து தமிழக மாநிலத்திற்குள் பறவைக்காய்ச்சல் பரவாத வண்ணம் அரசால் நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றுள்ளது.