வரும் 20ம் தேதி கேரள முதல்வராக பினராயி விஜயன் பதவியேற்பு!

kerala-cm-politics
By Nandhini May 17, 2021 02:20 PM GMT
Report

கேரளாவில் வரும் 20ம் தேதி பினராயி விஜயன் முதல்வராக பதவியேற்க இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மற்றும் இடதுசாரி ஜனநாயக முன்னணி ஒருங்கிணைப்பாளர் விஜயராகவன் தகவல் தெரிவித்திருக்கிறார்.

அண்மையில் கேரள மாநில சட்டப்பேரவைக்கு நடந்து முடிந்த தேர்தலில் ஆளும் சி.பி.எம் கட்சி தலைமையிலான எல்.டி.எஃப் கூட்டணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்து இரண்டாம் முறையாக தொடர்ந்து ஆட்சிக் கட்டிலை தக்கவைத்துக்கொண்டது. மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 99 தொகுதிகளில் எல்.டி.எஃப் கூட்டணியும், மீதமுள்ள 41 தொகுதிகளை காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் கூட்டணியும் கைப்பற்றின.

கடந்த மே 2-ம் தேதியே வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியானாலும் அடுத்த அரசு இன்னும் பதவியேற்காமல் இருந்து வந்தது. குறிப்பாக பினராயி விஜயன் தான் அடுத்து முதல்வர் என்றாலும், கட்சிக் கூட்டம் தீர்மானிக்கும் வரை அவர் பதவியேற்க மாட்டார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், இன்று இடதுசாரி ஜனநாயக முன்னணியின் அமைச்சரவைக் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு பிறகு விஜயராகவன் செய்தியாளர்களிடம் பேசியதாவது -

21 உறுப்பினர்கள் கொண்ட அமைச்சரவை கேரள அரசில் இடம்பெறுகிறது. கொரோனா காரணமாக, வரும் 20ம் தேதி எளிமையாக பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இந்த பதவியேற்பு விழாவில் குறைவானவர்களே கலந்துகொள்ள உள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 12 அமைச்சர்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 4 அமைச்சர்களும் ஒதுக்கப்பட்டுள்ளது. மற்றக் கூட்டணி கட்சிகளுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களுக்கான இலாகாக்களை முதல்வர் பினராயி விஜயன் முடிவு செய்வார்.

இவ்வாறு அவர் பேசினார்.