கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி..! கேரள முதல்வர் அதிரடி..!
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் சற்று குறைந்து வந்தாலும் பல்வேறு மாநிலங்களில் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.
இதனால் பல இடங்களில் கொரோனாவால் உயிரிழக்கும் பெற்றோர்களால், குழந்தைகள் நிர்கதியாக நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏற்கனவே டெல்லி, ஹரியானா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனாவால் பெற்றோர்களை இழந்து வாடும் குழந்தைகளுக்கு நிதியுதவி மற்றும் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், கேரள மாநிலத்தில் பெற்றோர்களை இழந்து வாடும் குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவையும் அரசே ஏற்கும் என்றும், குழந்தைகளுக்கு 18 வயதாகும் வரை மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.