ராணுவத்தினருக்கு நன்றி சொன்ன மழலை - இந்திய ராணுவம் அளித்த நெகிழ்ச்சி பதில்!
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் மீட்புப் பணி ஈடுபட்டுள்ள ராணுவத்தினரை பாராட்டி 3ம் வகுப்பு மாணவர் கடிதம் எழுதியள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நிலச்சரிவு
கேரள மாநிலத்தில் தொடர் கனமழை காரணமாக கடந்த 29ம் தேதி வயநாடில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதனையடுத்து முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், 400க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் மண்ணோடு மண்ணாகப் புதைந்தனர்.
இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400 நெருங்கும் நிலையில்150க்கும் மேற்பட்ட உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.200க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போய்யுள்ளனர் . தொடர்ந்து, இன்று 7வது நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், ராணுவத்தினர், தீயணைப்பு படையினர், மாநில மீட்புப் படையினர் உள்ளிட்டோர் மீட்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
மீட்புப் பணி
மலைப் பகுதிகளில் ராணுவத்தினர் ஹெலிகாப்டர், வாக்கி டாக்கி, ரேடார் மற்றும் மோப்பநாய்களின் உதவியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கேரள தனியார் பள்ளியில் 3 ஆம் வகுப்பு படிக்கும் ரயான் என்ற மாணவர், மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள ராணுவர்களைப் பாராட்டி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், அன்புள்ள இந்திய ராணுவத்தினருக்கு ,மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள் தங்களது பசியைப் போக்க பிஸ்கட் சாப்பிடும் வீடியோக்களைப் பார்த்தேன். மேலும் ராணுவ வீரர்கள் பாலம் கட்டும் வீடியோவை இப்போதுதான் பார்த்தேன்.நானும் ஒருநாள் ராணுவத்தில் சேர்ந்து நாட்டை பாதுகாப்பேன் என்று தனது மழலை மொழியில் எழுதி இருந்தார்.
இந்திய ராணுவம்
சிறுவனின் இந்தக் கடிதத்தை இந்திய ராணுவம் தெற்கு கமாண்டின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அந்தப் பதிவில், உங்கள் இதயப்பூர்வமான வார்த்தைகள் எங்களை ஆழமாகத் தொட்டன. இக்கட்டான காலங்களில், நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்,
உங்கள் கடிதம் இந்த பணியை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. உங்களைப் போன்ற ஹீரோக்கள் எங்களால் முடிந்ததைச் செய்ய எங்களுக்கு ஊக்கமளிக்கிறார்கள். நீங்கள் சீருடை அணிந்து எங்களுடன் நிற்கும் நாளுக்காக நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். ஒன்றாக இணைந்து நமது தேசத்தை பெருமைப்படுத்துவோம் என்று பதிவிட்டுள்ளார்.