1ஆம் வகுப்பு சிறுமியை வன்கொடுமை செய்த ஆசிரியர் - அதிர்ச்சி சம்பவம்
கேரளாவில் 1ஆம் வகுப்பு சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அறிவியல் பாடம் எடுத்த ஆசிரியர் ஒருவருக்கு 29 வருட சிறை தண்டனை வழங்கி குன்னம்குளம் போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இத்துடன் 2.15 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது. அபராதம் கட்ட தவறினால் அதற்கும் சேர்த்து 2 வருடங்கள் 9 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. இந்தச் சம்பவம் 2012ஆம் ஆண்டு நிகழ்ந்தது. சுமார் 9 ஆண்டுகளுக்குப் பிறகு மிகச் சிறப்பான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என நீதிபதியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
குற்றவாளியான ஆசிரியரின் பெயர் காரத் அப்துல் ரஃபீக். இவர் நிலம்பூரிலுள்ள சீராகுழியைச் சேர்ந்தவர். சுற்றுலா சென்ற சோர்வின் காரணமாக பேருந்தின் பின் இருக்கையில் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி படுத்து உறங்கியுள்ளார்.
அந்தச் சமயம் தான் அப்துல் ரஃபீக் சிறுமியிடம் அத்துமீறி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் போக்சோ சட்டம் இந்தியாவில் அறிமுகப்படுத்திய பின் திருச்சூர் மாவட்டத்தில் முதலில் பதிவான வழக்கு இந்த வழக்கு தான்.
இந்த வழக்கைப் பதிவுசெய்து விசாரணை நடத்தியவர்கள் பவரட்டி காவல் துறையினர். இந்த வழக்கில் 20 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன. குற்றம் சம்பந்தபான 12 ஆவணங்களும் சமர்பிக்கப்பட்டன.
இருப்பினும் அறிவியல் ரீதியான சாட்சியமே அவர் குற்றவாளி என்பதை உறுதிப்படுத்தியது. இந்தத் தீர்ப்பு தாமதமாகக் கிடைத்தாலும் மிகச்சிறந்த தீர்ப்பாக அமைந்துள்ளது.