கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாநில மொழிப் பாடங்கள் கட்டாயமாக்கப்படும் - வானதி!
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் இல்லாததைத் திமுக எம்.பி. கனிமொழி விமர்சித்த நிலையில், பாஜக மூத்த தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் பதிலளித்துள்ளார்.
தமிழ் ஆசிரியர்கள்
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் இல்லாததைத் திமுக எம்.பி. கனிமொழி விமர்சித்த நிலையில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழைக் கொண்டு வந்ததே பிரதமர் மோடிதான் என பாஜக மூத்த தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் பதிலளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், தமிழ் கற்பிக்க நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர ஆசிரியர்களின் எண்ணிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பூஜ்ஜியம் என மத்திய கல்வி இணையமைச்சர் ஜெயந்த் சவுத்ரி பதிலளித்திருந்தார்.
இதையடுத்து இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்த எம்.பி., கனிமொழி, “இந்தி கற்பிக்க 86 ஆசிரியர்களும், சமஸ்கிருதம் கற்பிக்க 65 ஆசிரியர்களும் இருப்பதாகக் மத்திய பாஜக அரசு கூறுவதாகவும்,
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் வழியாக எந்த தாய்மொழியைக் காக்கிறீர்கள் அல்லது கற்றுக்கொடுக்கிறீர்கள்?” எனக் கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில் இதற்கு எக்ஸ் பக்கத்தில் பதிலளித்துள்ள பாஜக மூத்த தலைவர் வானதி ஸ்ரீனிவாசன், பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான்,
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் உள்ளிட்ட அந்தந்த மாநில மொழிகளை விருப்பப் பாடமாகக் கற்பிக்கும் முறை கொண்டு வரப்பட்டதாகவும், புதிய தேசிய கல்விக் கொள்கை முழுமையாக நடைமுறைக்கு வந்த பிறகு, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், அந்தந்த மாநில மொழிப் பாடங்கள் கட்டாயமாக்கப்படும் எனக் கூறியுள்ளார்.