”கீழடி நம் தாய்மடி” இந்திய வரலாற்றில் முதன்முறையாக
இந்திய வரலாற்றில் முதன்முறையாக கீழடியில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி அருங்காட்சியகத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
கீழடியில் 2014 முதல் நதிக்கரை நாகரீகம் குறித்த அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன.
மத்திய, மாநில தொல்லியல் துறை நடத்திய அகழாய்வில் செங்கல் கட்டுமானம், வெவ்வேறு கால கட்டங்களில் பயன்படுத்தப்பட்ட உறை கிணறுகள், சுடுமண் பானைகள், யானை தந்த்தில் செய்யப்பட்ட பொருட்கள் என ஏராளமான பொருட்கள் கண்டறியப்பட்டன.
ஆய்வின் மூலம் கீழடியில் கண்டறியப்பட்ட பொருட்கள் 2600 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என கண்டறியப்பட்டது.

அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை கொண்டு இரண்டு ஏக்கர் பரப்பளவில் பத்து கட்டட தொகுதிகளுடன் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு 2023 முதல் பார்வையாளர்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.
அகழாய்வு பணிகள் முடிவடைந்த பின் மூடப்பட்ட செங்கல் கட்டுமானம், உறை கிணறுகள், உலை கலன்கள், சுருள்வடிவ குழாய் ஆகியவற்றையும் திறந்த வெளி அருங்காட்சியகமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை அடுத்து கடந்தாண்டு ஜனவரி முதல் திறந்த வெளி அருங்காட்சியக பணிகள் நடந்து வந்தன.

இங்கு 4.5 ஏக்கரில் ரூ.24.30 கோடி செலவில் 65 ஆயிரத்து 380 சதுர அடியில் இரண்டு அரங்குகளாக அமைக்கப்பட்ட திறந்த வெளி அருங்காட்சியகத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 11:40 மணிக்கு சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைக்க உள்ளார்.
திறந்த வெளி அருங்காட்சியகத்தில் 'கீழடி நம் தாய்மடி' என்ற எழுத்துகள் பிண்ணணியில் 'செல்பி' பாயிண்ட்டும் அமைக்கப்பட்டுள்ளது.
