தென் மாநிலங்களில் சாதித்து காட்டிய எம்ஜிஆர்; தவறவிட்ட கேசிஆர் - ஆட்சியைப் பிடிக்கும் காங்கிரஸ்?
தெலங்கானாவில் நடந்து முடிந்த தேர்தலின் முடிவுகள் தற்போது வெளியாகி வரும் நிலையில் ஆளும் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) பின்னடைவைச் சந்தித்துள்ளது.
தெலுங்கானா
ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் கடந்த 2 மாதங்களாக பலகட்டங்களாக சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அதில் 4 மாநிலங்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு இன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கையானது தொடங்கி தொடர்ந்து எண்ணப்பட்டு வருகிறது. மேலும், மிசோரம் மாநில வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. இதில் தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) பின்னடைவைச் சந்தித்துள்ளது. தெலங்கானா என்ற தனி மாநிலம் உருவான பிறகு நடந்த 2 சட்டமன்ற தேர்தலிலும் வென்று ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தவர்தான் சந்திரசேகரராவ் எனும் கே.சி.ஆர்.
சந்திரசேகர ராவ்
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் தெலங்கானா பகுதிகளில் இருக்கும் மக்கள் வஞ்சிக்கப்படுவதாகவும், இதற்கான தீர்வு தனி மாநிலம் உருவாவதுதான் என்று முடிவெடுத்த கே.சி.ஆர் கடந்த 2001ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து விலகி பாரதிய ராஷ்டிர சமிதி என்ற கட்சியைத் தொடங்கினார்.
மேலும், கடந்த 2014ல் தெலங்கானா மாநிலம் உதயமான அதே ஆண்டு நடந்த தேர்தலில் 63 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தார். அடுத்து 2018ல் நடந்த தேர்தலிலும் 88 தொகுதிகளை கைப்பற்றி முதல்வரானார்.
இந்நிலையில் தென் மாநிலங்களில் தொடர்ச்சியாக மூன்றுமுறை முதல்வராக இருந்த எம்.ஜி.ஆருக்கு பிறகு இவரும் தொடர்ச்சியாக முதல்வர் ஆவார் என்று எதிர்பார்த்த நிலையில், தேர்தல் முடிவுகள் எதிராக அமைந்துள்ளது. அம்மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் காங்கிரஸ் 60க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.