நடிகை கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு : காவ்யா மாதவன் விசாரணைக்கு ஆஜராக மறுப்பு
நடிகை கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நடிகர் திலீப்பின் மனைவி காவ்யா மாதவன் விசாரணைக்கு ஆஜராக மறுப்பு தெரிவித்துள்ளார்.
கேரளத்தில் கடந்த 2017-ம் ஆண்டு பிரபல நடிகை நள்ளிரவில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கின் பின்னணியில் இருந்ததாக நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை எர்ணாகுளம் சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானபோது, போட்டோக்கள் எடுக்கப்பட்டது என்றும், அது திலீப்பிடம் உள்ளது என்றும், அவர் உள்பட பலரும் அந்த படங்களை பார்த்துள்ளனர் என்றும் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து அவரது செல்போன்கள் ஆய்வு செய்யப்பட்டு குற்றம் நீரூபிக்கப்பட்டது.
இந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து விசாரணை அதிகாரியை கொலை செய்ய திட்டம் தீட்டியது தொடர்பாக நடிகர் திலீப் உள்பட 8 பேர் மீது மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் நடிகை காவ்யா மாதவனுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இந்த வழக்கில் காவ்யா மாதவனுக்கு உள்ள தொடர்பை உறுதி செய்யும் வகையில், நடிகர் திலீப்பின் மைத்துனர் சூரஜ் மற்றும் திலீப்பின் நண்பரான சரத் ஆகியோர் போனில் பேசும் ஆடியோ உரையாடல்கள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த உரையாடல் அடங்கிய சி.டி.யை கேரள உயர்நீதிமன்றத்தில் குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்துள்ள நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த நாளை (திங்கட்கிழமை) நேரில் ஆஜராக நடிகை காவ்யா மாதவனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், நடிகர் திலீப்பின் மனைவி காவ்யா மாதவன் நாளை விசாரணைக்கு ஆஜராக மறுப்பு தெரிவித்து குற்றப்பிரிவு போலீசாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், அந்த கடிதத்தில் வரும் 13-ம் தேதி தனது வீட்டில் விசாரணை மேற்கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளார்.