அடாவடி செய்த அருள் வாக்கு அம்மா - களி திண்ண வைத்த போலீசார்
தமிழகத்தில் புதுசு புதுசா தினுசு தினுசா தோன்றும் சாமியார்களின் எண்ணிக்கை என்பது நாள் தோறும் அதிகரித்து வருகிறது.
அருள் வாக்கு அம்மானின் அட்ராசிட்டி
அந்த வகையில், கடந்த ஆண்டு பெரிதளவில் மக்களிடம் பேசப்பட்டவர் அன்னப்பூரணி கண்ணைப் பறிக்கும் விலை உயர்ந்த பட்டு சேலையில் பக்தர்களுக்கு வைப்ரேசன் மோடில் ஆசி வழங்கி வந்தார்.
இதே போல தலையில் கொண்டை, கொண்டை நிறைய மல்லிப் பூ, நெற்றியில் வட்ட குங்கும பொட்டுடன் கை நிறைய கண்ணாடி வளையல் போட்டு கலகலவென வலம் வரும் இந்த அம்மணி தான் அருள் வாக்கு அம்மா என்று அழைக்கப்படும் கீதா.
தன்னுடைய சீடர்களையும் தன்னிடம் அருவாக்கு பெற வருபவர்களையும் செல்லமாக செல்லப்பிள்ளை என்று அழைத்து வரும் இந்த அம்மணியிடம் ஒரு இளைஞர் பட்டாளமே சேவை செய்து வருகிறது.
இந்த அம்மணியோ தனக்கென்று யூடியூப் சேனல் ஒன்றை வைத்துக் கொண்டு தன்னிடம் அருள் வாக்கு வாங்க வரும் குடும்பத்தினர் மற்றும் தன்னுடைய நிகழ்வுகளை தன் பக்தர்களுக்கு வீடியோவாக கொடுத்து ஆதரவு அலையை அதிகரித்து வருகிறார்.
களி திண்ண வைத்த போலீசார்
இதை நம்பி பின் செல்லும் இளைஞர்களோ...நீ சொன்ன மட்டும் போதும் எல்லாரும் ஓடி வருவாங்க என்று கூறி அம்மணி அருள் வாக்கு அம்மாவை மெய்சிலிர்க்க வைக்கின்றனர்.
தமிழகம் மட்டுமின்றி இவருக்கு கேரளாவிலும் பக்தர்கள் இருந்து வருகின்றனர். அம்மணி அருள்வாக்கு அம்மா கீதாவை தேடி வரும் பெண்கள் மற்றும் ஆண்கள் பணம்,நகை, மற்றும் சேலைகள் உள்ளிடவற்றை கடவுள் மீது உள்ள நம்பிக்கையில் அவருக்கு பரிசாக கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தான் இளைஞரை கடத்திய வழக்கில் அருள் வாக்கு அம்மா கைது செய்யப்பட்டு சிறையில் களித்திண்ண வைத்துள்ளனர் போலீசார்.
காணாமல் போன இளைஞர்
கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜா கடை பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி இவருடைய மகன் பார்த்திபன் 21 வயதான இவர் ஓமலுாரில் உள்ள பேக்கரியில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற பார்த்திபனிடம் இருந்து எந்த தகவலும் வராத நிலையில் அவரது தந்தை குப்புசாமி அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதையடுத்து தனது மகன் பார்த்திபனை பல இடங்களில் தேடி உள்ளார். ஆனால் எங்கும் தென்படாத அவரை நினைத்து மனம் நொந்து வாடியுள்ளார் குப்புசாமி.
இந்த நிலையில், போச்சம்பள்ளி அடுத்த காட்டாகரம் ஓம் சக்தி கோவிலில் பெண் சாமியார் கீதாவுக்கு பணிவிடை செய்து வந்துள்ளார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குப்புசாமி தன் மகனை விடுவிக்குமாறு வேண்டுகோள் வைத்து மன்றாடி உள்ளார். ஆனால் தந்தையின் மன்றாடலை கேட்டும் மனம் இறங்காத பார்த்திபன் வீட்டிற்கு தனது தந்தையுடன் வருவதற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
கலவரமான காவல் நிலையம்
இதனால் மனம் உடைந்து போன அவரது தந்தை குப்புசாமி காவல் நிலையம் சென்று தன் மகனை மீட்டு தரும்படி புகார் அளித்துள்ளார்.
இதனை அடுத்து அங்கு சென்ற போச்சம்பள்ளி காவல் உதவி ஆய்வாளர் குமார் தலைமையிலான காவலர்கள் பார்த்திபனை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.
அப்போது அவர்களுடன் பெண் சாமியார் கீதா மற்றும் காட்டகரம் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் உள்ளிட்டோரும் காவல் நிலையத்திற்கு வந்துள்ளனர்.
குப்புசாமி சாந்துார் கிராமத்தைச் சேர்ந்த பாமக பிரமுகர் பூபாலனை தன்னுடன் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளார்.
அப்போது பூபாலன் பெண் சாமியார் கீதாவிடன் மகனை பெற்றோருடன் ஒப்படைத்து விட வேண்டியதுதானே என கூறியுள்ளார்.
போலீசார் மீது தாக்குதல்
இதனால் ஆத்திரம் அடைந்த தில்லாலங்கடி பெண் சாமியார் கீதா, பூபாலனை தாக்கியுள்ளார். இதை பார்த்த போச்சம்பள்ளி காவல் உதவி ஆய்வாளர் குமார் தடுக்க முயன்றுள்ளார்.
அப்போது பெண் சாமியார் கீதாவுடன் வந்த வேல்முருகன் என்ற சீடர் காவல் உதவி ஆய்வாளர் குமாரை சட்டையை பிடித்து தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அருள்வாக்கு அம்மா கீதா, மற்றும் வேல்முருகன் கடத்தல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவரை போன்றவர்களை நம்பி இளையதலைமுறையினர் ஆன்மிகம் பாதை என்ற பெயரில் வழிகெட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.