சோறு இல்லைனா விளையாட முடியுமா? ஆதவ் அர்ஜூனா பேச்சுக்கு கஸ்தூரி ராஜா கேள்வி
விவசாயத்தை விட விளையாட்டு தான் ரொம்ப கஷ்டம்'' என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியது குறித்து மேடையில் கேட்கப்பட்ட கேள்விக்கு நடிகர் தனுஷின் தந்தையும், இயக்குநருமான கஸ்தூரி ராஜா பதிலளித்துள்ளார். சென்னையில் நடந்த படவிழா ஒன்றில் நடிகர் தனுஷின் தந்தையும், இயக்குநருமான கஸ்தூரி ராஜா பங்கேற்று பேசினார்.
அப்போது அவரிடம் ஒருவர், ''விளையாட்டு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விவசாயத்தை விட விளையாட்டு தான் கடினமான ஒன்று என பேசி உள்ளார்.இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?'' என கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், விவசாயம் தான் நம்பர் ஒன். அனைத்து உயிர்களினதும் உயிர் நாடி. ஜீவநாடி. சோறு திங்கலனா எவன்யா உயிரோடு இருக்க முடியும்? சோறு தின்றால் தானே விளையாட்டுக்கு போக முடியும்'' என நடிகர் தனுஷின் தந்தையும், இயக்குநருமான கஸ்தூரி ராஜா பதிலளித்துள்ளார்.

2 நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் விளையாட்டுதுறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், அப்போது அவர் விவசாயத்தை விட ரொம்ப கஷ்டமான துறை விளையாட்டு துறை என குறிப்பிட்டார். இதனால் சிலர் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதுதொடர்பாக ஆதவ் குறிப்பிடுகையில் ''விவசாயத்தை விட ரொம்ப கஷ்டமான துறை விளையாட்டு துறை. இரண்டையும் சமமாக பார்க்கலாம்.
ஏனென்றால் விளையாட்டு வீரர் காலை 5 மணிக்கு எழுந்து 6 மணிக்கு மைதானத்தில் இருக்க வேண்டும். 3 மணிநேரம் அவனுடைய பயிற்சி இருக்க வேண்டும்.
கடினமான வேலைகளை முடித்துவிட்டு தான் பள்ளிகளுக்கு செல்ல வேண்டும். கால்வலி, உடல் வலி இருக்கும். தூக்கம் வரும்.2 ஆயிரம் கலோரிகள் காலையிலேயே போய் இருக்கும்.
இப்படி இருக்கும்போது விளையாட்டு வீரர், வீராங்கனைகள் படிப்பில் சரியாக கவனம் செலுத்த முடியாது. இதனால் தான் பள்ளி கல்வித்துறை அமைச்சரிடம் படிக்கிற பசங்களையும், விளையாடுற பசங்களையும் ஒரே அறையில் வைப்பதே தப்பு.
விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு கவனிப்பு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளோம் '' என்றார். விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஆதவ் அர்ஜுனா இந்த கருத்தை தெரிவித்திருந்தாலும் இது குறித்து பலரும் விமர்ச்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.