காஷ்மீரில் தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட கோயில் 31 ஆண்டுகளுக்கு பிறகு திறப்பு
காஷ்மீரில் கடந்த 1980-ம் ஆண்டு காலக்கட்டங்களில் தீவிரவாத அச்சுறுத்தலால் ஸ்ரீநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஷீத்தல் நாத் கோயில் 1990-ம் ஆண்டு மூடப்பட்டது. இதனையடுத்து, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு நீக்கியதையடுத்து, அங்கு தீவிரவாதிகளும், தீவிரவாத நடவடிக்கைகளும் கணிசமாக குறைந்திருக்கிறது.
இதனால், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இந்து மதத்தினரின் மறுகுடியமர்வும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், தீவிரவாத அச்சுறுத்தல் குறைந்திருப்பதை கருத்தில் கொண்டு, ஸ்ரீநகரில் உள்ள ஷீத்தல் நாத் கோயில் நேற்று முன்தினம் மீண்டும் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடத்தப்பட்டது.
இதுகுறித்து அக்கோயிலின் பூஜை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ரவீந்தர் ரஸ்தான் கூறுகையில், '31 ஆண்டுகளுக்கு பிறகு ஷீத்தல் நாத் கோயில் திறக்கப்பட்டிருப்பது பெரு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

இக்கோயில் திறக்கப்படுவதை அறிந்ததும் இப்பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் சகோதரர்கள் அளித்த பேராதரவு மெய்சிலிர்க்க வைக்கிறது. கோயிலை சுத்தம் செய்யும் பணியிலும் அவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்கிறார்கள். சரஸ்வதி பூஜையை ஒட்டி கோயில் திறக்கப்பட்டதால் ஏராளமான பக்தர்கள் வந்து பூஜை செய்து வருகிறார்கள்' என்றார்.