கரூர் கணக்கை முடிக்காமல் விடமாட்டோம்: ஆதவ் அர்ஜுனா
கரூரில் கூட்ட நெரிசலை ஏற்படுத்தி அப்பாவி மக்களை பலிகொண்டதற்கு திமுகவே காரணம் என்றும், அந்த கணக்கை தவெக முடிக்காமல் விடாது என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
மேலும், கரூர் மக்களின் கண்ணீரால்தான் கொளத்தூரில் ஸ்டாலின் தோல்வியடைந்தார் என்றும் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், வளர்மதி (திருச்சி), ஆனந்தன் உள்ளிட்டோர் தலைமையில் 10 ஆயிரம் பேர் தவெகவில் இணையும் நிகழ்வு இன்று மாமல்லபுரத்தில் நடைபெற்றது.

திமுக மீது குற்றம்சாட்டு
அப்போது பேசிய ஆதவ் அர்ஜுனா, கரூர் சம்பவத்தின் அனைத்து உண்மைகளும் வெளிவரும் என்றும், காவல்துறையை பயன்படுத்தி திட்டமிட்டு கூட்ட நெரிசலை ஏற்படுத்தி அப்பாவி மக்களை பலிகொண்டதாக திமுக மீது குற்றம்சாட்டினார்.
இதேபோன்ற சதித் திட்டம் காரணமாகவே விஜய் கரூர், கடலூர் உள்ளிட்ட சில பிரச்சாரங்களை ரத்து செய்ததாகவும், 14 மாவட்டங்களில் விஜய் பங்கேற்கும் கூட்டங்களில் நெரிசலை உருவாக்க திட்டமிடப்பட்டிருந்ததாகவும் கூறினார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி குடும்பத்தின் கடைசி முதல்வர் ஸ்டாலின்தான் என்றும், தவெக ஆட்சியில் யாருடைய தலையீடும் இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், திமுகவுடன் கூட்டணி அமைக்க எடப்பாடி பழனிசாமி முயன்றதால் அதிமுகவினர் அதிருப்தியடைந்து தவெகவில் இணைந்ததாகவும், அதிமுகவில் 99 சதவீதம் பேர் தவெகவுக்கு வருவார்கள் என்றும் கூறினார்.
ஓ.பன்னீர்செல்வத்தை துரோகி என கூறிய எடப்பாடி பழனிசாமி, அதிமுகவையே திமுகவிடம் அடமானம் வைக்க முயன்றதாகவும் விமர்சித்தார்.
திமுகவும் அதிமுகவும் உள்ளாட்சி அல்லது மக்களவைத் தேர்தலில் கூட்டணி அறிவிக்கலாம் என்றும், கரூர் சம்பவத்தின் உண்மை வெளிவரும் என்ற அச்சத்தில் தவெக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க திமுக முயன்றதாகவும் குற்றம்சாட்டினார்.
ஆனால், தொடர்பு கொண்டவுடன் தவெக எம்எல்ஏ போலீசில் புகார் அளித்ததாக கூறிய அவர், ஸ்டாலின் குடும்பத்துடன் லண்டனில் சென்று குடியேறிவிடட்டும் என கடுமையாக விமர்சித்தார்.