கரூர் பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் திருப்பம் - பயின்ற பள்ளியின் ஆசிரியரும் தற்கொலை
கரூரில் பாலியல் துன்புறுத்தலால் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அதே பள்ளியை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூரில் பாலியல் வன்கொடுமை காரணமாக 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி கடந்த 19 ஆம் தேதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாலியல் வன்கொடுமையால் சாகும் கடைசி பெண் தானாக தான் இருக்க வேண்டும் என்று தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்ட மாணவி, தன்னை யார் இந்த முடிவை எடுக்க வைத்தார் என்பதை கூறவே பயமாக உள்ளதாகவும் தெரிவித்திருந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் மாணவியின் தாய் அளித்த பேட்டியில் பள்ளியில் உள்ள வேதியியல் ஆசிரியர் மீது சந்தேகம் இருப்பதாகவும் தனது மகள் அந்த பாட புத்தகத்தில் சில சந்தேக குறியீடுகளை வரைந்துள்ளதாகவும், அந்த பாடப்பிரிவின் வகுப்பை கவனிக்கவே தனது மகளுக்கு பிடிக்காது என்றும் தெரிவித்திருந்தார். மேலும் பள்ளியில்தான் தனது மகளுக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்ததுள்ளது என தெரிவித்திருந்தார்.
இதனால் பள்ளியில் அந்த மாணவியின் தாய், உறவினர்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கரூரில் தனியார் பள்ளியின் கணித ஆசிரியர் சரவணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவர் ஏற்கெனவே தற்கொலை செய்து கொண்ட மாணவி படித்த பள்ளியில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று பள்ளியில் தனது தந்தைக்கு உடல்நிலை பாதிப்பு என கூறி அரை நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு திருச்சி துறையூர் அருகே செங்காட்டுப்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றார்.அங்கு அவர் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.