உரிமையாளரின் உயிரை காப்பாற்றிய நாய் - கரூர் அருகே நெகிழ்ச்சி சம்பவம்
கரூர் அருகே உரிமையாளரின் உயிரை காப்பாற்றிய நாயால் அப்பகுதியில் நெகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
உரிமையாளரின் உயிரை காப்பாற்றிய நாய்
கரூர் மாவட்டம், ஆலமரத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணி . இவர் 6 வயது டாபர்மேன் வளர்ப்பு நாயுடன், உறவினர்களை பார்க்க நேற்று மாலை தாந்தோன்றிமலைக்கு தன் காரில் சென்றுக்கொண்டிருந்தார்.
அப்போது, கரூர், கோவை சாலையில் கார் வந்துக்கொண்டிருந்தபோது, காரின் முன்பக்கத்தில் திடீரென புகை வந்துள்ளது. இதை பார்த்த வளர்ப்பு நாய் குறைக்க ஆரம்பித்துள்ளது. நாய் குறைத்துக் கொண்டே இருந்ததால், சந்தேகமடைந்த மணி காரை நிறுத்தினார். அப்போது, வெளியே வந்த அவர் காரின் முன்பக்கம் தீப்பற்றி எரிந்துக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக காரில் இருந்த நாயை இறக்கி வெளியே வந்து நின்றார். கார் மளமளவென தீப்பற்றி எரிந்தது. இது குறித்து போலீசாருக்கு மணி தகவல் கொடுத்தார். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மளமளவென தீப்பற்றி எரிந்த காரை தண்ணீரை பீய்ச்சியடுத்து அணைத்தனர். சுமார் அரை மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.
தன் உரிமையாளரின் உயிரை காப்பாற்றிய செல்ல பிராணியான நாயை அங்கிருந்தவர்கள் வெகுவாக பாராட்டி சென்றனர்.