கோடு போட சொன்னா ரோடே போட்ட செந்தில் பாலாஜி - முப்பெரும் விழாவை எப்படி நடத்தி முடித்தார்?

M K Stalin V. Senthil Balaji DMK Karur
By Sumathi Sep 19, 2025 10:25 AM GMT
Report

கரூரில் உள்ள கோடங்கிபட்டியில் செப்டம்பர் 17 ஆம் தேதி மாலை 5 மணிக்கு தி.மு.க. முப்பெரும்விழா 2025 மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

திமுக முப்பெரும்விழா 

அவர், விழா ஏற்பாடுகளால் கவரப்பட்டு, தி.மு.கழகத்தின் கரூர் மாவட்டச் செயலாளர் செந்தில்பாலாஜியை மனம் திறந்து பாராட்டியவார்த்தைகள் தான் இவை. பொதுக் கூட்டங்களையே மாநாடு போல நடத்தக் கூடியவர் செந்தில்பாலாஜி. முப்பெரும்விழா என்றால் சும்மா விடுவாரா. அசர வைத்துடன் இல்லாமல் வியக்கவும் வைத்துவிட்டார் என்றே சொல்லலாம்.

dmk meeting

முப்பெரும் விழாவிற்கான இடம் தேர்வு செய்யப்பட்ட அடுத்த வினாடியிலிருந்து ஆரம்பமாகிவிட்டது செந்தில்பாலாஜியின் சிந்தனை ஓட்டம். விழாமேடையில் தொடங்கி, முதலமைச்சரை வரவேற்பது வரை ஒவ்வொரு இடத்திலும் தன்னுடைய பிரம்மாண்டத்தை காட்டியிருக்கிறார் அவர். மேடை மட்டும் 200 அடி நீளமும், 60 அடி அகலமும் கொண்டதாக அமைக்கப்பட்டது.

ஆயத்தப் பணிகளை பார்வையிட வந்த அமைச்சர் முத்துசாமி, “சாதாரணமாக ஒரு கட்சியினர் கூட்டம் நடத்துகிறார்கள் என்றால், அதன் மொத்த இடமே இந்த மேடை அளவுக்கு தான் இருக்கும். ஆனால், செந்தில்பாலாஜி, அரங்கத்தையே விழா மைதானம் அளவுக்கு அமைத்து அசத்தியிருக்கிறார்’ என்றார். முன்னதாக, கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர், அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம் என சட்டமன்ற தொகுதி வாரியாக செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தினார் செந்தில்பாலாஜி.

அப்போது, ஒவ்வோரு தொகுதியில் இருந்தும் 50,000 பேர் என 4 தொகுதிக்கும் சேர்த்து 2 லட்சம் கட்சியினர் விழாவுக்கு வரும் வகையில் ஏற்பாடுகள் இருக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். அதோடு, கருப்பு, சிவப்பு வண்ணத்தில் இளம்பெண்களுக்கு சுடிதார், 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு சேலை, ஜாக்கெட், ஆண்களுக்கு வேஸ்டி, சட்டை, இளைஞர்களுக்கு டி.சர்ட், பேண்ட் என வழங்கப்பட்டிருக்கிறது.

senthil balaji

விழா நாளன்று மைதானாம் முழுவதும் கருப்பு, சிவப்பு நிறங்களில் பெண்களின் கூட்டம் அசத்திக் கொண்டிருந்ததை காண முடிந்தது. ஒரு லட்சம் இருக்கைகள் போடப்பட்டிந்தன. அதில், ஒரு பை வைக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு குடிநீர் பாட்டில், இனிப்பு, காரம், அதை வைத்து சாப்பிட ‘பேப்பர் பிளேட்’ மற்றும் சாப்பிட்டு முடிந்ததும் கை துடைத்துக் கொள்ள ‘டிஸ்யூ பேப்பர்’ என ஒவ்வோன்றையும் கவனத்துடன் பார்த்து பார்த்து செய்திருந்தார் செந்தில்பாலாஜி.

அந்தவகையில், 1.5 லட்சம் ’வாட்டர் பாட்டில்’ அடங்கிய பைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இவை தவிர, தொண்டர்களின் வசதிக்காக கூட்ட நெறிசல் ஏற்படாத வகையில், அதிக அளவிலான நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டிருந்தது. இதை பாதுகாப்பு ஏற்பாடுகளின் உச்சம் என்றே சொல்லலாம். விழாவுக்கு வருவர்களின் வசதிகளை செய்து கொடுப்பது மட்டுமல்ல, அவர்களை பாதுகாப்பாகவும் பார்த்துக் கொள்ளக் கூடிய தனது கடமையை சிறப்பாக செய்திருந்தார் செந்தில்பாலாஜி. மைதானத்தின் நுழைவு வாயிலில் முதலமைச்சரை வரவேற்க செண்டை மேளம், ஒயிலாட்டம், ’டிரம் செட்’ குழுவினர் அமர்த்தப்பட்டிருந்தனர்.

மேடையிலிருந்து ஏறக்குறைய 800 மீட்டர் நீளத்திற்கு மைதானத்தின் நடுவே தார் சாலை போடப்பட்டிருந்தது. இதன் வழியாக தான் முதலமைச்சர் ‘எண்ட்ரி’ கொடுத்தார். கரூர் நகரின் முக்கிய இடங்களில் மூன்று மாடி உயரமுள்ள கட்டிடங்களில் பிரமிக்க வைக்கும் வகையில் 5 பிரம்மாண்ட பலூன்களை பறக்கவிட்டிருக்கிறார் செந்தில்பாலாஜி. ஹைட்டரன் வாயு நிரப்பப்பட்ட 37 அடி சுற்றளவும், 5 அடி உயரமும் கொண்ட இந்த பலூன்கள் 120 அடி கயிறில் கட்டப்பட்டு விண்ணைத் உரசி பறந்து கொண்டிருக்கிறது. அதில் ஒரு பலூன் விழா நுழைவாயிலில் உயரத்தில் இருந்தபடி முதல்வரை வரவேற்றது. முதலமைச்சரின் வாகனம் நுழைந்ததும் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.

karur

அந்த தார் சாலையின் இருபுறமும் வண்ண மத்தாப்புகள் பூவாய் பொழிய, பட்டாசு மற்றும் தொண்டர்களின் உற்சாக கூச்சலுடன் வரவேற்பை ஏற்றுக் கொண்டவாறு விழா மேடையை நோக்கி நகர்ந்தார் முதலமைச்சர். மேடையில் அருகே பச்சை பந்தல் அமைத்து அந்த மாலை நேரத்தை மேலும் இனிமையாக்கி இருந்தார் செந்தில்பாலாஜி.

இவ்வளவு பிரம்மாண்டங்களுக்கும் முத்தாய்பாய் இயற்கை மழையை கொடுத்து மகிழ்ச்சிப்படுத்திவிட்டது. வழக்கமாக மழை பெய்ய ஆரம்பித்ததுமே கூட்டம் களைந்திருக்க வேண்டும். ஆனால், அங்கிருந்த தொண்டர்கள் அதை கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். ஆங்காங்கே குடை பிடித்தபடி, சேர்களை வைத்து மறைத்தவாறு சிலர் இருந்தாலும், பெரும்பான்மையோர் மழையில் நனைத்து, விளையாடி ஆட்டம் போட்டு அனுபவித்தனர் என்றே சொல்லலாம். விழா துவங்கியதும், வரவேற்புரை ஆற்றினார் செந்தில்பாலாஜி. அப்போது, “மாபெரும் இயக்கத்தின் முப்பெரும் விழாவை கழகத்தின் கோட்டையாம்..  

கரூரில் நடத்திட வாய்ப்பளித்த, 2026 இல் திராவிட மாடல் 2.0 அமைக்க இருக்கும் திராவிட சுடரே. உங்களின் வியூகம் என்னவென்று தெரியாமல் எதிரிகள் விழி பிதுங்கி நிற்க, ஓய்வரியா சூரியனாக தமிழ்நாட்டின் வரலாற்றில் தவிர்க முடியாத ஆளுமையாக, சாதனைகளால் சுடர்விடும் முதலமைச்சர் அவர்களை வருக என வரவேற்கின்றேன். உங்களை வரவேற்பதில் இந்த மண் பெருமை கொள்கிறது” என்றார். மேலும், “புன்னகையால் எங்களை அரவணைத்தும், அதே புன்னகையால் எதிரிகளை ஓட ஓட விரட்டும் உதயநிதி ஸ்டாலின் அவர்களை வரவேற்கிறேன்” என்றவர்,

மற்ற கழக முன்னோடிகளையும் வரவேற்று அமர்ந்தார். இதனையடுத்து விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், தந்தை பெரியார் விருது தி.மு.க.வின் துணைப்பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதிக்கு வழங்கப்பட்டது. பேரறிஞர் அண்ணா பெயரிலான விருதை சுப.சீதாராமன் பெற்றுக் கொண்டார். பாவேந்தர் பாரதிதாசன் விருது மறைந்த குளித்தலை சிவராமனுக்கு வழங்கப்பட்டது. அதை அவரது குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர். கலைஞர் விருதினை சோ.மா.ராமச்சந்திரனும், பேராசியர் அன்பழகன் விருதை மருதூர் இராமலிங்கமும், மு.க.ஸ்டாலின் விருதினை பொங்கலூர் பழனிசாமியும் பெற்றுக் கொண்டனர். இந்த ஆண்டு புதியதாக முரசொலி செல்வம் பெயரில் பத்திரிக்கையாளர் ஏஎஸ்.பன்னீர் செல்வத்திற்கு விருது வழங்கப்பட்டது.

நாமதான்.. நாம மட்டும்தான் ஜெயிக்கிறோம்- செந்தில் பாலாஜி சூளுரை

நாமதான்.. நாம மட்டும்தான் ஜெயிக்கிறோம்- செந்தில் பாலாஜி சூளுரை

இவ்விழாவில் பேசிய தி.மு.க. இளைஞர் அணி செயலாளாரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின், “கழகத்திற்கு எவ்வளவோ சிறப்புகள் உண்டு, வரலாறு உண்டு. அந்த வரலாறுகளின் வரிசையில் இந்த கரூர் முப்பெரும் விழாவும் நிச்சயம் இடம் பெறும். கலைஞர் அவர்கள் முதன்முதலில் நின்று வென்ற கரூர் மாவட்டத்திலிருந்து, இங்குள்ள 4 தொகுதிகளிலில் இருந்து, 2026 க்கான கழகத்தின் வெற்றிக் கணக்கை துவங்குவோம். வெல்வோம் 200, படைப்போம் வரலாறு” என்று கூறினார். இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

அப்போது, “இது முப்பெரும் விழாவா, விரைவில் நாம் சந்திக்க இருக்கும் வெற்றி விழாவா. இது கரூர் அல்ல. திராவிட முன்னேற்றக் கழக ஊர். கொட்டும் மழையில் தான் பேரறிஞர் அண்ணா அவர்கள், இதே நாளில் வடசென்னைப் பகுதியில் அமைந்திருக்கும் ராபின்சன் பூங்காவில் கழகத்தைத் தொடங்கி வைத்தார்கள். அவ்வாறு தொடங்கி வைத்த இந்தக் கழகம், 75 ஆம் ஆண்டுகாலம் மட்டுமல்ல, நூற்றாண்டும் நாம் காணப் போகிறோம்.

உங்களிடம் பேசுவதைவிட, இந்தக் கொட்டும் மழையிலும் உங்களின் எழுச்சியைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று எனக்கு உணர்வு ஏற்பட்டிருக்கிறது. என்ன உணர்ச்சி. என்ன ஆர்வம். என் உயிரோடு கலந்திருக்கும் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் உடன்பிறப்புகளே உங்களுக்கு என் முதல் வணக்கம்” என தனது உரையை ஆரம்பித்தார்.

கரகோஷமும், கைதட்டும் கரூர் மாவட்டம் முழுவதும் ஒலிக்க, தொடர்ந்து பேசினார். “இந்த ஆண்டு முப்பெரும் விழாவை கரூரில் நடத்த வேண்டும் என்று அனுமதி கேட்டு, அருமைச் சகோதரர் செந்தில்பாலாஜி அவர்கள், என்னிடம் வந்தார். நானும் ஒப்புதல் அளித்தேன். பொதுக்கூட்டம் என்று சொல்லி, மாபெரும் எழுச்சி மாநாட்டையே இங்கே ஏற்பாடு செய்திருக்கிறார் செயல்வீரர் செந்தில்பாலாஜி அவர்கள். நாம் கோடு போடச் சொன்னால், ரோடு போடுவார்.

நீங்கள் எல்லாம் பார்த்திருப்பீர்கள். ரோடு போட்டு, அந்த ரோட்டு மேல்தான் நான் வாகனத்தில் வந்தேன். மேற்கு மண்டலத்தில் நம்முடைய எதிரிகளுக்கு எல்லாம் சிம்ம சொப்பனமாக இருப்பவர்தான், நம்முடைய செந்தில்பாலாஜி அவர்கள். அதனால்தான், அவர் வெளியில் இருந்தால் தங்களால் நிம்மதியாக தூங்க முடியவில்லை என்று, அவரை முடக்கப் பார்த்தார்கள். ஆனால், அவரை முடக்க முடியுமா. எடுத்த பணியை வெற்றிகரமாக முடித்து காட்டுவார். நான் உறுதியாகச் சொல்கிறேன், கழக வரலாற்றிலேயே, இப்படியொரு பிரமாண்டமான முப்பெரும் விழா நடந்திருக்காது.

கொட்டுகின்ற மழையாக இருந்தாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் குடையை பிடித்துக் கொண்டு, நாற்காலிகளைத் தலையில் வைத்துக் கொண்டு இந்த நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறீர்களே. இது ஒன்றே சாட்சி” என்றார். மேலும், “திறமை, உழைப்பு, அறிவு, ஆற்றல், ஆகியவற்றை ஒருங்கே பெற்ற தீரர்களின் கோட்டம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் வழிநின்று, தமிழினத்தின் எழுச்சிக்காக, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக உண்மையாக உழைக்கிறவர்கள் நாம்.

2019ஆம் ஆண்டுமுதல், நாம் எதிர்கொண்ட அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று வருகிறோம். சாதாரண வெற்றி அல்ல, எதிரிகளை எல்லாம் கலங்கடிக்கும் வெற்றியைப் பெற்று வருகிறோம். இந்த வெற்றிப் பயணம், தமிழ்நாட்டு மக்களின் ஆதரவுடன் 2026 லும் நிச்சயம் தொடரும். திராவிட மாடல் 2.0 ஆட்சி நிச்சயம் அமையும். நான் பெருமையுடன் சொல்கிறேன், இந்தியாவில் ஆயிரக்கணக்கான அரசியல் இயக்கங்கள் இருக்கிறது. எந்த இயக்கத்திலும் உங்களைப் போன்ற கொள்கை உணர்வுடைய தொண்டர்கள் இருக்க மாட்டார்கள். இப்படி கடுமையாக உழைக்கவும் மாட்டார்கள். “கழகம் நம்மைக் காத்தது. நாம் கழகத்தை காக்க வேண்டும்” என்று உழைக்கும் உங்களைப் போன்ற உடன்பிறப்புகள் இருக்கும்வரை எந்தக் கொம்பனாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்கடிக்க முடியாது.

உங்கள் உழைப்பைத் தொடர்ந்து கொடுத்து, திராவிடம் உயர்த்திய தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம் என்று 2026 தேர்தலிலும் நீங்கள் களப்பணியாற்ற வேண்டும். அதன்மூலமாக, தொடர்ந்து தி.மு.க. ஆட்சி அமைந்தது என்று நாம் புது வரலாறு படைக்க வேண்டும்” என்றவர், வரலாறு படைக்கலாமா. தயாராகி விட்டீர்களா” என கூட்டத்தைப் பார்த்து கேட்க, ’படைப்போம்.. படைப்போம்..’ என ஆர்ப்பரித்தார்கள் தி.மு.க. தொண்டர்கள். தொடர்ந்து பேசிய முதலமைச்சர், “தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு இடையூறு செய்வது எந்தக் கொள்கை என்று மக்களுக்கு நன்றாகத் தெரியும். அது, காவிக் கொள்கை. இரண்டாயிரம் ஆண்டுகளாக அந்தக் கொள்கைக்கு எதிராக திராவிடம், இந்த இயக்கம் போராடிக்கொண்டு இருக்கிறது. இன்றைக்கு அந்தக் கொள்கையின் அரசியல் முகம், பா.ஜ.க. ஒன்றியத்தில் ஆளும் பா.ஜ.க. அரசுடன் நாம் தொடர்ந்து போராடிக்கொண்டு இருக்கிறோம்.

இரண்டு நாட்களுக்கு முன்புகூடஎதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்கள் என்ன பேசியிருக்கிறார். “கடந்த அ.தி.மு.க. ஆட்சியைக் காப்பாற்றியதே பா.ஜ.க. தான்” என்று உண்மையைப் பேசியிருக்கிறார். அந்தக் கைப்பாவை அரசை, தமிழ்நாட்டு மக்கள் தூக்கி எறிய தி.மு.க.தான் காரணம் என்று நம்மீது வன்மத்தை கொட்டிக்கொண்டு இருக்கிறார்கள். அதனால் தான், தொடர்ந்து நமக்கு இவ்வளவு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதைப் பார்த்து பயந்து முடங்கிவிடுவோம் என்று நினைத்தார்கள். தி.மு.க. என்ன மிரட்டலுக்கு பயப்படுற கட்சியா. இந்தியாவிலேயே முதல்முறையாக ஒரு மாநிலக் கட்சி, ஆட்சியைப் பிடித்த வரலாற்றை உருவாக்கியவர்கள் நாம். 75 ஆண்டுகால ’ஹிஸ்டரி’ இருக்கிறது நமக்கு. இந்தி மொழியைத் திணிக்கிறார்கள்.

நம் மாணவர்களை பலிவாங்கும் நீட் தேர்வில் இருந்து விலக்கு தர மறுக்கிறார்கள். நம்முடைய பிள்ளைகள் படிப்பதற்கான கல்வி நிதியைக் கூட விடுவிக்க மறுக்கிறார்கள். கீழடியின் தொன்மையை மறைக்கிறார்கள். வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் நம்முடைய வாக்குரிமையையே பறிக்கிறார்கள். ஆனால், அந்நாளும் சரி, இந்நாளும் சரி, எந்நாளுமே அடக்கு முறைக்கு இங்கே ’நோ எண்ட்ரி’ தான். ஆதிக்கத்துக்கு இங்கே ’நோ எண்ட்ரி’ தான். திணிப்புக்கு இங்கே ’நோ எண்ட்ரி’ தான். மொத்தத்தில் இங்கே பா.ஜ.க.வுக்கு ’நோ எண்ட்ரி’ தான். ஏன் என்றால், இது பெரியார், அண்ணா, கலைஞர், செதுக்கிய தமிழ்நாடு” என்று பேசினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தி.மு.க. வரலாற்றில் இந்த முப்பெரும் விழா வரலாறு படைத்திருக்கிறது என்றால், அதை மிகச்சிறப்பாக நடத்தி முடித்து, முதலமைச்சர் உள்ளிட்ட கழக முன்னோடிகளின் அன்பை பெற்றிருக்கிறார் செந்தில்பாலாஜி.