கரூர் மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - மாவட்ட ஆட்சியர் தகவல்
கரூர் மாவட்டத்தில் 12 உள்ளாட்சி அமைப்புகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
கரூரில் விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கரூர் மாவட்டம் முழுவதும் அமையப் பெற்றுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் ஆய்வு மேற்கொண்டனர்.
தான்தோன்றிமலை பகுதியில் அமைந்துள்ள அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், வட்டாட்சியர் மோகன் ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர், கரூர் மாவட்டத்தில் அமையப்பெற்றுள்ள 12 உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.
10 உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதல் கட்டமாகவும், இரண்டு அமைப்புகளுக்கு இரண்டாவது கட்டமாக என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆறு வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.
இந்த ஆய்வு போது கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் மற்றும் தேர்தல் பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.