தொடரும் பாலியல் தொல்லைகள் - 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த பிரபல மருத்துவர் தலைமறைவு
கரூரில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த பிரபல மருத்துவரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
கரூர் மாவட்டம் பசுபதிபாளையத்தை சேர்ந்த பெண் ஒருவர், அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கேஷியராக பணியாற்றி வருகிறார். இவரது 17 வயது மகள் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு பயின்று வருகிறார்.
அவ்வப்போது தாயை பார்க்க மருத்துவமனை வந்து செல்லும் சிறுமியிடம் அந்த மருத்துவமனையில் மருத்துவர் ரஜினிகாந்த் பாலியல் தொல்லை அளித்து வந்ததாக கூறப்படுகிறது.
மேலும், மருத்துவமனையின் மேலாளர் இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி தனது தாயாரிடம் கூறவே, தாயும் இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில், ரஜினிகாந்த் மற்றும் சரவணன் மீது போக்சோ வழக்கு பதிந்த போலீசார், தலைமறைவாகியுள்ள மருத்துவரை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், மருத்துவமனை மேலாளர் சரவணை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.