மரங்களின் நண்பர் என்று அழைக்கப்பட்ட கருப்பையா மரணமடைந்தார்!

tree dead friend Karuppiah
By Jon Mar 13, 2021 01:01 PM GMT
Report

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வந்த கருப்பையா உடல்நிலை சரியில்லாமல் மரணமடைந்தார். அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கருப்பையா (85). இவர், கடந்த 15 ஆண்டுகளாக பெரம்பலூர், அரியலூர், மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர், விருதுநகர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட எஸ்.பி. அலுவலகம் உள்ளிட்ட அரசு அனைத்துத் துறை அலுவலக வளாகங்கள், பள்ளிகள், சாலையோரங்கள், கோயில்.வளாகம், சிமென்ட் ஆலைகள் என பல இடங்களில் பல வகையான மரக்கன்றுகளை நட்டு வளர்த்தார்.

அதற்காக தனது வீட்டின் தோட்டத்தில் வேம்பு, புங்கன், வாகை, புளியங்கன்று என பல வகையான மரக்கன்றுகளை 2 அடி முதல் 3 அடி வரை வளர வைத்து, அதன் பிறகு இதுபோன்ற இடங்களில் நட்டுவைத்து பராமரித்து வந்தார். இதுவரை, சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை வளர்த்து நட்டு வைத்திருக்கிறார். இந்த சேவைக்காக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினரிடம் பாராட்டும், பாராட்டுச்சான்றிதழும் பெற்றிருக்கிறார்.

மரங்களின் நண்பர் என்று அழைக்கப்பட்ட கருப்பையா மரணமடைந்தார்! | Karuppiah Friend Trees Dead

இதனையடுத்து, கடந்த ஓராண்டாக வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு கருப்பையா வீட்டிலேயே முடங்கி இருந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் அரசு மற்றும் தன்னார்வலர்கள் பலர் இவருக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்தனர். வெளிநாட்டில் வேலை பார்க்கும் சிலர் மடக்கும் வசதி கொண்ட படுக்கையினை இவருக்கு வாங்கி கொடுத்து உதவினர்.

இந்நிலையில், நேற்றிரவு அவர் உடல்நல குறைவு காரணமாக அவரது உயிர் பிரிந்தது. இறுதி ஊர்வலம் அவரது கிராமமான கள்ளுரில் இன்று (மார்ச்.13) மதியத்துக்கு மேல் நடந்தது. அவரது உயிரிழப்பு குறித்த தகவலறிந்த தன்னார்வலர்கள் பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.