மத நல்லிணக்கத்தை கலவரமாக மாற்றுகிறது பாஜக, ஆர்.எஸ்.எஸ் - கருணாஸ் ஆவேசம்

BJP Tirupparankunram Murugan Temple
By Sumathi Dec 06, 2025 01:33 PM GMT
Report

மதுரை திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவதை முன்வைத்துக் தமிழர்களிடையே ; இஸ்லாமியர் - இஸ்லாமியர் அல்லாதோர் இடையே கலவரத்தை தூண்ட முயலும் பா.ஜ.க. - ஆர்.எஸ். எஸ் மதவாத கும்பலின் மோதல் அரசியல் போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது.

karunas

ஏற்கனவே, திருப்பரங்குன்றம் மலையில் வழிபாடு சிக்கலாகவும், அரசியலாகவும் ஆக்கப்பட்டுவிட்ட நிலையை உருவாக்கியதும் இதே கும்பல்தான். இவ்வளவு காலம் பின்பற்றாத ஒரு நடைமுறையை சட்டத்தின் வாயிலாகப் புகுத்தி, தர்காவுக்கு அருகாமையில் தீபமேற்ற அனுமதிப்பதும் எந்த ஒரு சட்ட நீதிகளையும் பின் பற்றாமல் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல்,

சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவசர ஆணைகள் பிறப்பித்து, உடனே தர்கா அருகில் தீபம் ஏற்றுங்கள் என்று கட்டளை இடுகிறார். இது என்ன சட்டநெறிமுறை என்று விளங்கவில்லை. சட்டமும் நீதியும் மக்களுக்கானது. அது மதத்திற்கானது அல்ல. ஆனால் நீதிபதி சுவாமிநாதன் அதை மதத்திற்காக மடைமாற்றுகிறார்.

இது கண்டனத்திற்குரியது. யார் இந்த நீதிபதி சுவாமிநாதன்? சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் என்பவர் இந்தப் பதவிக்கு வருமுன் பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளில் இருந்து செயலாற்றியவர். அவரிடம் தமிழர்களுக்கான நீதியை எப்படி எதிர்பார்க்கமுடியும்? என்ற கேள்வி நமக்குள் இருந்தாலும்,

அவர் நீதிதேவதையின் கட்டளையை ஏற்காது நீதிதேவதைக்கே காவியம் சாயம் பூசிவிட்டதுதான் பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸின் தமிழின பகை அரசியலின் வெளிப்பாடு.! ஆனால், இந்த சூழ்ச்சியெல்லாம் அறிந்து உடனடி நடவடிக்கையாக, இந்து – இஸ்லாமியரிடையே கலவரம் வரக் கூடாது என்ற நோக்கத்தில், தர்கா அருகே தீபம் ஏற்றத் தடை போட்டதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எமது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்!

தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தவுடன் வேறு வழியில்லாமல் இவ்வழக்கை வரும் செவ்வாய்க்கிழமைக்கு (09.12.2025) ஒத்தி வைத்துள்ளார் ஜி.ஆர். சுவாமிநாதன். எப்படியிருந்தாலும், பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ் கும்பலின் அரசியல் சூழ்ச்சியை தமிழ்நாடு அரசு முறியடிக்கும். திருப்பரங்குன்றத்தின் வரலாற்று உண்மைகளை எப்போதும் ஆர்.ஆர்.எஸ். கும்பல் அறியாது. அவர்களது ஒரே நோக்கம் தமிழர் -முஸ்லீம் எதிர்ப்புதான்.

மத நல்லிணக்கத்தை கலவரமாக மாற்றுகிறது பாஜக, ஆர்.எஸ்.எஸ் - கருணாஸ் ஆவேசம் | Karunas Statement About Thiruparankundram Bjp Rss

அந்த உள்நோக்க வெளிப்பாடுதான் இந்த கலவரத்திற்கான முகாமையான காரணம். வரலாற்று உண்மைகளை மூடி மறைக்கும் இந்த சங்பரிவாரக் கும்பலுக்கு சில உண்மைகளை உணர்த்த வேண்டியிருக்கிறது. அதாவது, மதுரை, திருப்பரங்குன்ற மலை அடிவாரத்தில் தமிழ்க்கடவுள் முருகனின் -முதல் படை வீடு - உள்ளது. அதற்கு மேல் ஏறிச்சென்றால் மலையின் நடுப்பகுதியில் தீபத்தூண் (Deepa Thoon / Fire Pillar) எனப்படும் பாரம்பரிய தீப கம்பம் உள்ளது.

பல்லாயிரம் ஆண்டுகளாக அங்குதான் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வந்தது. 19-ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷாரால் இந்தியாவின் மாபெரும் நில அளவைப் பணி (Great Trigonometrical Survey of India) நடத்தப்பட்டபோது, மலையில் ஒரு குறியீட்டுக் கல்லை (Survey Stone / Marker Stone) நட்டு வைத்தார்கள். அதுதான் அந்தக் கல்! 19-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு மலை உச்சியில் பிள்ளையார் கோயில் கட்டப்பட்டது.

அதன் பின்னர், முந்தைய தீபத்தூணைவிட உயரமான இடத்தில் இருப்பதால், கார்த்திகை தீபம் இங்கே ஏற்றப்பட்டு வருகிறது. உச்சிப் பிள்ளையார் கோயில் மேலே செல்லும் வழியின் இடது புறத்தில் மலையில் தனியாக சிக்கந்தர் தர்கா (Sikkandar Dargah) உள்ளது. இது இஸ்லாமிய புனிதத் தலமாகும். இங்கு இந்து சகோதரர்கள் முருகன் கோயிலிலும், பிள்ளையார் கோயிலிலும் வழிபாடு நடத்துகிறார்கள்.

கார்த்திகை தீபம் பிள்ளையார் கோயிலில் ஏற்றப்படுகிறது. முஸ்லிம் சகோதரர்கள் தர்காவில் வழிபாடு நடத்துகிறார்கள். இங்கே இந்துக்களும் வருகிறார்கள். இதில் நல்லிணக்கமும் வளர்கிறது. நடுத்தரத்தில் உள்ள பழமையான தீபத்தூண் இன்னமும் அப்படியே உள்ளது. பிரிட்டிஷ் அளவைக் கல் தனியாக உள்ளது. - (செய்தி ஆதாரம் : சி. சரவணன்) - வேண்டுமென்றே தர்கா அருகில் உள்ள ஆங்கிலேயர் வைத்த மலை குறியீட்டுக் கல்லை தீபம் ஏற்றும் கல்லாக சித்தரித்து கலவரம் செய்கிறார்கள்.

இது இஸ்லாமியரை குறிவைக்கும் பா.ஜ.க.வின் மதவாத நுண் அரசியல் ஆகும்! சங்பரிவாரத்தைச் சேர்ந்த சிலர், “தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுக்கப்படுகிறது” என்று பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் காட்டுவது தீபத்தூண் அல்ல – பிரிட்டிஷார் வைத்த அளவைக் கல்லையே “தீபத்தூண்” என்று தவறாகக் காட்டுகிறார்கள். இந்த அளவைக் கல் தர்காவுக்கு மிக அருகில் உள்ளது.

அதாவது, தர்கா பகுதியிலேயே தீபம் ஏற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள். இதுதான் இவர்களது முஸ்லிம் எதிர்ப்பு அரசியல்! தீபம் ஏற்றும் தூணை விட்டுவிட்டு, ஆங்கிலேயர் வைத்த அளவை கல்லை தீபத்துண் என்று அழிச்சாட்டியம் செய்கிறார்கள். எம்டன் மகன் படத்தில் சுடுகாட்டிற்கு சென்று நடிகர் வடிவேல் “ அப்பா.. அப்பா.. செத்து… சாம்பலாயிட்டேயே” என்று கத்தும் போது, அங்கிருக்கும் பணியாளர் “ ஏ.. முதேவி.. ஒங்கப்பன் செத்த இடம் அங்க இருக்கு பாரு.. இது சாந்தி செத்த இடம்” என்பார்.

அதுபோலவே.. தீபம் ஏற்றும் தூணை விட்டுவிட்டு.. அளவை கண்டு இதுதான் தீபம் ஏற்றும் கல் என்று கதறுகிறது சங்கிக் கூட்டம்! உண்மையிலேயே தீபத்தூணும் அளவைக் கல்லும் இரண்டு வேறு வேறு என்பதற்கு ஆதாரம் இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். தரப்பே உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த புத்தகத்திலேயே இந்த விவரம் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் தீபத்தூண் வேறு, பிரிட்டிஷார் வைத்த அளவைக் கல் வேறு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் நிலைபாடு இந்த விவகாரத்தில் தெளிவாக உள்ளது. அதாவது பிள்ளையார் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்ற ஏற்கெனவே அனுமதி உள்ளது. தீபம் தொடர்ந்து பல ஆண்டுகாலமாக இங்கு தான் ஏற்றப்பட்டு வருகிறது. 03.12.2025 அன்றும் இங்கு தான் ஏற்றப்பட்டது. 2014 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியிலும் இதே நிலைதான் அப்போதும் பின்பற்றப்பட்டது. ஆனால் தர்கா பகுதியில் உள்ள அளவைக் கல்லில் தீபம் ஏற்ற அனுமதி இல்லை.

அதை அரசு அனுமதிக்கவும் இல்லை என்று சங்கிகளின் கலவரம் திட்டமிட்ட அரங்கேற்றம் செய்யப்பட்டது. இதுநாள் வரை எங்கு ஏற்றப்பட்டதோ அங்குதானே.. ஏற்றவேண்டும். ஆனால் சங்கிகளின் பேச்சு நடமுறையில் இல்லாத ஒன்று. இதில் உண்மை என்னவென்றால் உண்மையான தீபத்தூண் வேறு இடத்தில் உள்ளது. . தர்காவுக்கு அருகில் உள்ள அளவைக் கல்லையே “தீபத்தூண்” என்று பொய்யாகக் காட்டுகிறார்கள். இதற்கு ஆதாரம் – ஆர்.எஸ்.எஸ். தாக்கல் செய்த புத்தகமே! திருப்பரங்குன்றம் மலையில் பல்லாயிரம் ஆண்டுகளாக அமைதியும் - சகோதரத்துவமும் -மத நல்லிணக்கமும் நிலவுகிறது.

இதை பா.ஜ.க.வின் ஆதாய அரசியலுக்காக சீர்குலைக்க முயல்கிறது. முருகன் மலையில் சென்று , முருகனுக்கு ஆரோகரா என முழங்காமல், பாரத மாத்தா கீ ஜே” என்று கத்தும் போதே இவர்களுடையே சுய ரூபம் என்ன வென்று புரிந்து கொள்ளலாம்! இந்த பிரித்தாளும் சூழ்ச்சிக்கு தமிழ்மக்கள் எப்போதும் அடி பணிய மாட்டார்கள்.

இவ்வாறான ஒவ்வொரு கட்டத்திலும் இஸ்லாமியர் பகை அரசியல் எதிர்ப்பைக் காட்டும் பா.ஜ.க.வின் மதவாதபோக்கு தமிழ்நாட்டு மக்கள் கிழித்து தொங்கவிட்டுக்கொண்டே இருப்பர்கள் என்பதுதான் உண்மை!! எனவே தமிழ்நாட்டில் வாழும் அனைத்து மத மக்களும் ஒற்றுமையாக வாழ எல்லோரும் உறுதி ஏற்போம் என முக்குலத்தோர் புலிப்படைத்தலைவர் சே. கருணாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.