சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை: நடிகர் கருணாஸ்
சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை சார்பாக யாரும் போட்டியிடவில்லை என்று அக்கட்சியின் தலைவர் கருணாஸ் அறிவித்துள்ளார். அதிமுகவில் சில அமைச்சர்கள் உட்பட தன்னுடைய சமுதாய மக்களுக்கு துரோகம் செய்துவிட்டார்கள் என கருணாஸ் பகிரங்கமாக குற்றம்சாட்டியதுடன், அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, திமுகவுக்கு ஆதரவு வழங்குவதாக கூறப்பட்டு பின்னர் அதுவும் வாபஸ் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் டிடிவியின் அமமுகவுடன் கைகோருக்குமா? அல்லது வேறு கட்சியுடன் கூட்டணி அமைக்குமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வரும் தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை சார்பாக யாரும் போட்டியிடவில்லை என்று அக்கட்சி தலைவர் கருணாஸ் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் சட்டமன்ற தேர்தலில் முக்குலத்தோர் சமுதாயத்திற்கு துரோகம் இழைத்த அதிமுக நிராகரித்து தோற்கடிக்க சபதமேற்று உள்ளதாகவும், 234 தொகுதிகளிலும் வசிக்கும் முக்குலத்தோர்களிடம் நமது கோரிக்கை, அதிமுக எதிர்ப்பு உள்ளிட்டவை குறித்து சமூக வலைத்தளங்கள், ஊடகங்கள் வழியாக மக்களிடம் கொண்டு செல்ல தலைமை வலியுறுத்துகிறது என தெரிவித்துள்ளனர்.