முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்பனுக்குத் தப்பாமல் பிறந்திருக்கிறாரே என்று நினைத்தேன் - அமைச்சர் துரைமுருகன்..!
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு விழா ஓமந்தூரார் அரசு தோட்ட வளாகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்தார்.
இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,அமைச்சர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள்,நாடாளுமன்ற உறுப்பினர்கள்,தோழமை கட்சியினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வரவேற்புரை நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர்,இன்று நமக்கு ஒரு சிறந்த மகிழ்ச்சியான நாள் காரணம் நம்மிடம் நேரில் பேசுவதைப் போலவே சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதை கண்டு கண்ணீர் விடாமல் வெளியே வர முடியவில்லை.கருணாநிதிக்கு அங்கு தான் சிலை வைக்க வேண்டும் என்று இடத்தை தேர்வு செய்தவர் முதல்வர் ஸ்டாலின் தான்.
சாதாரண இடமாக இருந்த அந்த இடத்தை மகத்தான சட்டசபை இருக்கும் இடமாக மாற்றியவர் கருணாநிதி. கட்டுமானப் பணிகள் நடக்கும் போது,ஒவ்வொரு செங்கல்லாக பார்த்து பார்த்து அடுக்கினார்.
அப்போது நான் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தேன்.இதை கட்டும் வேலை எனக்கு இருந்தது. இதற்கு யோசனை சொன்னது எல்லாம் கருணாநிதி தான்.
அவர் கனவு நினைவாகி வந்த சமயத்தில் அதை இப்படி ஆக்கிவிட்டார்கள். கருணாநிதி சிலையை வைக்க ஓமந்துாரார் தோட்டத்தை ஸ்டாலின் தேர்வு செய்த போது அப்பனுக்குத் தப்பாமல் பிறந்திருக்கிறாரே என்று நினைத்தேன்.
வயதில் நாங்கள் மூத்தவர்களாக இருக்கலாம்.ஆனால் உங்கள் திறமை முன்பு நாங்கல் இளையவர்கள் என்றார்.
மேலும் பேசிய அவர்,முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறக்கப்பட்டுள்ளது வரலாற்றில் இடம் பெற்று விட்டது.
கருணாநிதி கைது செய்யப்பட்ட போது நேரடியாக வந்து விசாரித்ததை நேரில் பார்த்திருக்கிறேன்.
கருணாநிதி சிலையை நீங்கள் திறந்து வைத்தது பெரு மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்தார்.