'கலைஞரை அவமானப்படுத்த இவர் பெயரைச் சொன்னாலே போதும்' கமல் அடுத்த சர்ச்சை
சமீபத்தில் மக்கள் நீதி மய்யத்தின் நான்காம் தொடக்கவிழாவில் பேசிய கமல்ஹாசன் சக்கர நாற்காலி பற்றி தெரிவித்த கருத்து கடும் சர்ச்சைக்குள்ளானது. அப்போது, ‘’விட்டுக்கொடுத்தல்தான் அரசியல். நான் ஆரோக்கியமாக இருக்கும்போதே அரசியல் செய்துவிடவேண்டும். இப்போது எனக்கு 60 வயது ஆகிறது. மக்களுக்கு சேவை செய்யும் அந்த ஆக்டிங் லைப் எனக்கு வேண்டும்.
அஞ்சு வரும்தான். அப்புறம் ஒரு அஞ்சு வருசம் வேலை செய்யணும். 10 வருசம்தான். அதுக்கு அப்புறம் சக்கர நாற்காலியில எல்லாம் உட்கார்ந்துகிட்டு மக்களை தொந்தரவு செய்ய மாட்டேன்’’ என்று பேசியிருந்தார் கமல்ஹாசன். அவர் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியை தான் சாடியிருந்தார் என்று பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என குரல்கள் எழுந்தன. அதுகுறித்து கமல்அளித்த விளக்கத்தில், ’’நான் கருணாநிதி பற்றி பேசவில்லை . என்னுடைய சக்கர நாற்காலி.. என்னுடைய முதுமை.. இவைகளைப் பற்றி மட்டும் தான் நான் பேசினேன். கருணாநிதி மட்டும் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தது இல்லை. ரூஸ்வெல்ட்டும் அவருக்கு முன்பே சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தவர்.
ஆனால் அவர் இளமையில் இருந்தார். ஆகவே அவர் அமெரிக்க அதிபராக இருந்தார்’’ என்றார். சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கமலிடம் மீண்டும் வீல் சேர் கருத்து பற்றி கேள்வி கேட்கப்பட்டிருந்தது.
அதற்கு, ‘’வீல் சேர் குறித்து நான் சொன்ன கருத்தினை கருணாநிதியை அவமானப்படுத்திவிட்டதாக சொல்லிவருகிறார்கள். அவரை அவமானப்படுத்த வேண்டுமென்றால் மு.க.ஸ்டாலின் பெயரச்சொன்னாலே போதும்’’ என்றார்.